வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட அதிரடிப்படை காவலர்கள் தமிழக வனத்தில் கர்நாடக எல்லைப் பகுதியிலிருந்த மலைவாழ் மக்களுள் ஒருவரான சோளகர்களிடத்தில் காட்டிய அதிகார கோரமுகத்தின் ஆவணமே இந்த நாவல்.
“நான் சுமந்த அம்மக்களின் கதைகள் பாறையைவிட கனமானவை. இருளைவிட கருமை மிக்கவை. நெருப்பினைவிட வெப்பமானவை. பல சமயங்களில் நான் உள்வாங்கியவற்றை சுமக்கும் பலமற்றவனாய் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவற்றுள் சிலவற்றையாவது பதியாமல் விட்டுவிட்டால் கால ஓட்டத்தில், பின்னொரு காலத்தில் நான் சுமக்க இயலாத அவை கற்பனையாகக்கூட கருதப்படும்” என என்னுரையில் ச.பாலமுருகன் எழுதியிருப்பதைப் போல அம்மக்களின் கதை பாறையை விட கனமானவை தான். இருளை விட கருமையானவை தான், நெருப்பினைவிட வெப்பமானவை தான். அவற்றுள் சிலவற்றை மட்டுமே இந்நாவலில் ஆவணப்படுத்தியுள்ளார் பாலமுருகன். அந்த சிலவற்றைக் கூட எதோவொரு நாவலைப் படித்து முடிப்பதைப்போல் கடந்துவிட முடியவில்லை. சுமக்க முடியாத பாரமாய் இருந்து, அழுத்தம் தந்து, தூக்கம் தொலைக்கச் செய்கிறது.
இரண்டு பாகங்கள்.
சோளகர் தொட்டியிலுள்ள சோளகர்களின் வாழ்வியல் முறையை விளக்குவதில் தொடங்கி, சமதளத்தில் வாழ்ந்து வந்த கீழ்நாட்டவர்கள் (நாம் தான்) அவர்களிடத்தில் செய்து வந்த நிலஅபகரிப்பை விவரித்தபடி கதை நகர்கிறது. வீரப்பனாலும், வீரப்பனைத் தேடி வரும் காவலர்கள் விடுத்த கட்டுப்பாட்டினாலும், வனத்தினுள் சுதந்திரமாய் சுற்றித் திரிந்தவர்கள் தொட்டியினுள்ளேயே முடங்கிப்போனதுடன் முடிகிறது முதல் பாகம்.
எந்தத் தவறுமிழைக்காத மலைவாழ் மக்களுக்கு, தமிழ்நாடு மற்றும் கர்நாடக போலீஸின் அதிகாரத்தினால் ஏற்பட்ட காயங்களின் வலிதான் இரண்டாம் பாகம்.
லத்தியும் பூட்ஸ் கால்களும், சிறுமியோ கற்பவதியோ முதியவளோ… யாராக இருப்பினும் வன்புணர்வு செய்யும் ஆண்குறிகளும், அடித்தே கொல்லப்பட்டவர்களுக்கு/ சாவின் விளிம்பில் இருப்பவர்களுக்கு பச்சை நிறத்தில் புதிய சட்டையைத் தைத்து, வனத்தின் நடுவே எடுத்துச்செல்லப்பட்டு அடுத்த நாள் செய்தியில் “வீரப்பன் ஆட்களுக்கும் போலீஸாருக்கும் ஏற்பட்ட மோதலில் வீரப்பன் ஆட்கள் சுட்டுக் கொலை” என அச்சிடப்பட்டிருக்கும் தினசரிகளும், போலீஸ் ஜீப் / வேனின் சத்தம் கேட்டாலே பயம் தொற்றிக்கொள்ளும் ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களும் நிறைந்த இரண்டாம் பாகத்தை முடித்தபோது அம்மக்களின் வலி அலறல்களாய் ஒலித்தது.
நூல்: சோளகர் தொட்டி
ஆசிரியர்: ச. பாலமுருகன்
வெளியீடு: எதிர் வெளியீடு
பக்கங்கள்: 286
விலை: ரூ. 250
- நிவேதிதா அந்தோணிராஜ்