இந்தியாவுக்கு முதற்கட்டமாக இரண்டரை கோடி தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது இதையடுத்து நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி.
அமெரிக்காவில், பெரும்பான்மையானோருக்கு தடுப்பூசி போட்டாகிவிட்ட நிலையில் மிகுதியாக இருக்கும் தடுப்பூசிகளை தேவை உள்ள உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க போவதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்திருந்தார். அதன்படி, தங்கள் வசம் உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை, தடுப்பூசி கிடைக்காமல் திணறி வரும் நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதையடுத்து அமெரிக்காவில் தடுப்பூசி தொகுப்பில் இருந்து குறிப்பிட்ட பகுதியை பெறுவதற்காக இந்தியா முயற்சி மேற்கொண்டது. சமீபத்தில் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இது தொடர்பாக அமெரிக்க அரசை வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் முதல் கட்டமாக 6 கோடி கொரோனா தடுப்பூசிகளை தேவை உள்ள நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க போவதாக அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். இதில் ஒரு பகுதியாக இரண்டரை கோடி தடுப்பூசிகளை இந்தியாவுக்கு வழங்க போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பிரதமர் மோடியுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியாவுக்கு தடுப்பூசி விநியோகம் செய்வதாக உறுதி அளித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பரவலை ஒழிக்க, அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொது சுகாதார தேவைகள் குறித்தும் மோடியிடம், கமலா ஹாரிஸ் எடுத்துரைத்தார்.
இதேபோல் மெக்ஸிகோ அதிபர், குவாத்தமாலா அதிபர், கரீபியன் சமூகத்தின் தலைவர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய துணை அதிபர் கமலா ஹாரீஸ் தடுப்பூசி பகிர்வு குறித்து உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவின் உதவிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மூவேந்தன்