ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என்று அமித் ஷா பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை ஆற்றியுள்ளார்.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது, இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பிற மொழிகளுக்கு மாற்றாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தார். அமித் ஷாவின் இந்தப் பேச்சு இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிப்பதற்கான முகாந்திரமாக இருப்பதாக விமர்சனத்துக்குள்ளானது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாகக் கூறுகையில், “ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது.
‘இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா? ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்!” என்று தெரிவித்துள்ளார். சமூக வலைதளப் பக்கங்களிலும் இதனைப் பதிவிட்டுள்ளார்.