தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. பட்டாக் கத்தியால் கேக் வெட்டுவது, பொது இடங்களில் மோதிக் கொள்வது, படுகொலைகள், சமூக விரோத செயல்கள் எல்லாம் தினமும் செய்திகளில் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் உயர்நீதிமன்றமே ரவுடிகள் தொடர்பான வழக்குகளின் போது, ‘கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ரவுடிகளை அடக்க என்றே தனிச் சட்டங்கள் உள்ளன. அப்படி ஒரு சட்டத்தை தமிழக அரசு ஏன் இயற்றக் கூடாது?’ – என்று கேட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில், தமிழக சட்டப் பேரவைக் கூடியபோது மாதவரம் திமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் இது குறித்து பேரவையில் பேசினார். ‘மகாராஷ்டிர மாநிலத்தில் ரவுடிகளுக்கு எதிராக தனி சட்டங்கள் உள்ளது போல தமிழகத்திலும் இயற்றப்பட வேண்டும். மக்கள் எதிர்பார்ப்பது அதைத்தான்’ என்றார். அவரது பேச்சு பேரவையை ஈர்த்தது. பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கியதாகத் தெரிகின்றது.
இந்நிலையில் கடந்த மாத இறுதியில், ரவுடி அயனாவரம் ஜோசப் கொலை வழக்கு விசாரணை அடந்தது. அதில், ‘ரவுடிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?’ என்று நீதிமன்றம் அரசிடம் கேட்டது.
அதற்கு பதில் அளித்த தமிழக அரசு, தமிழகத்தில் ரவுடிகளையும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கட்டுப்படுத்த என்றே ‘ஒருங்கிணைந்த குற்றச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ என்ற சட்டம் எழுதப்பட்டு உள்ளதாகவும். அது ஒரு மசோதாவாக உள்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், விரைவில் பேரவையில் சட்டமாக நிறைவேறும் என்றும் கூறியது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த உயர்நீதிமன்றம், இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வந்தால் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்க முடியும் – என்றும் கூறியது.
இப்படி ஒரு சட்டம் தேவை என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த சட்டத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து இருப்பது குற்றச் செயல்களுக்கு எதிராக போராடுபவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளது. தக்க நேரத்தில் இந்த கோரிக்கையை சட்டமன்றத்தில் முன்வைத்த திமுக எம்.எல்.ஏ. சுதர்சனத்திற்கும் பல்வேறு தரப்பினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்த சட்டம் கூடிய விரைவில் அமலுக்கு வர வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அதே சமயம் சமீப காலத்தில் சில நடவடிக்கைகளால் தனது பெயரைக் கெடுத்துக் கொண்ட தமிழக காவல்துறை, வலிமையான சட்டங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும், அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் காவல்துறையினரும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமை அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
- சே.கஸ்தூரிபாய்