பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி கடந்த சில பத்தாண்டுகளில் மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. உலகின் மிக உயர்ந்த பகுதியான இமய மலை சிகரம் முதல், உலகின் மிகப் பெரிய பள்ளமான மரியானா அகழி வரை அனைத்து இடங்களுக்கும் பிளாஸ்டிக்கை மனிதன் கொண்டு சேர்த்துவிட்டான். அதன் விளைவாக மனித உடலுக்குள்ளும் பிளாஸ்டிக் இப்போது நுழைந்து உள்ளது.
உணவுப் பொருட்களுக்கான கலன்களில் பிளாஸ்டிக் அதிகம் பயன்படுத்தப்படுவதால், உணவு உட்கொள்ளும்போதும், நீர் அருந்தும் போதும், சுவாசிக்கும் போதும் மனித உடலுக்குள் பிளாஸ்டிக் துகள்கள் செல்கின்றன. இவை மனித செல்களை சிதைக்கும் அபாயம் உள்ளது.
செம்பு, இரும்பு போன்ற உலோகங்களால் ஆன பொருட்களை மனிதர்கள் பயன்படுத்தும்போது அந்த உலோகத்தின் சிறு துகள்கள் மனித உடலுக்குள் செல்வது உண்டு. ஆனால் அவை தாதுக்களாக மாறிவிடுவதால் உடலால் ஏற்கப்படும், உடல் நலனுக்கும் நன்மை கொடுக்கும். இதற்கு மாறாக மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் 5 மில்லிமீட்டருக்குக் குறைவான விட்டம் கொண்ட பிளாஸ்டிக் துகள் கள் மனித உடலுக்குள் சென்றால் அவை எந்த மாற்றமும் அடைவது இல்லை, எனவே அவற்றை உடலால் கிரகிக்க முடியாது. இதனால்தான் அவை கழிவாக உள்ளேயே இருந்து நோய்களைத் தோற்றுவிக்கின்றன.
இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் சுவாசக் குழாய்கள், மலம் போன்றவற்றில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்கள் 22 தன்னார்வலர்களிடம் ஒரு புதிய சோதனையை மேற்கொண்டனர். அவர்களின் ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்கின் வகைகளான பாலிமெத்தில் மெதக்ரிலேட், பாலிப்ரோப்பிலீன், பாலிஸ்டிரீன், பாலிஎதிலீன், பாலிஎதிலீன் டெரெப்தாலேட் – ஆகியவற்றில் ஏதாவது உள்ளதா? – என்று ஆய்வு செய்தனர்.
இந்த ரத்த சோதனையில் அவர்களில் 17 பேருக்கு ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் கலப்பு உள்ளது உறுதியானது. அதாவது ஆய்வில் பங்கேற்ற நபர்களில் 80% பேரின் இரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் இருந்து உள்ளது. இவர்களில் 11 பேர்களுக்கு இரத்தத்தில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் எனும் ஒரே வகையான மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வாகனப் புகையில் உள்ள நுண்துகள்கள் ஏற்கனவே தாய்ப்பால் முதல் குழந்தையின் நஞ்சுக் கொடி வரை ஊடுருவி உள்ளது, அதனால் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் அகால மரணங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மைக்ரோ பிளாஸ்டிக்கும் மனித உடலில் ஊடுருவி வருவதால் இன்னமும் என்னென்ன விளைவுகளை மனித இனம் சந்திக்கும் என்பது தெரியவில்லை.