குறிப்பிட்ட சமூக மக்களை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீராமிதுன் கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
தமிழில் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் கடந்த வாரம் வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவிட்டார்.
அதில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதோடு, அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் குற்றப்பின்னணியை உடையவர்களாக இருப்பதாகவும் கூறினார். இந்த வீடியோ பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.
இதையடுத்து நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் தன்னை கைது செய்ய வேண்டும் என்றால் அது கனவில் தான் நடக்கும் என்று மீராமிதுன் பதிலுக்கு சவால் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவரது செல்போன் சிக்னல் மற்றும் வீடியோ ஐபி அட்ரஸை வைத்து கேரளாவில் மீரா மிதுன் நேற்று அதிரடியாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மீராமிதுனை போலீசார் சுற்றி வளைத்துப்பிடித்து கைது செய்த போது அவர் கத்தி, கூச்சலிட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்து அதையும் வீடியோ எடுத்து பதிவிட்டார்.
அது நெட்டிசன்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டது. அவரை ஆலப்புழா குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்றப்பின் நேற்றிரவு அவரை அழைத்துக்கொண்டு சாலை மார்க்கமாக சென்னைக்கு போலீசார் கிளம்பினர்.
ஆனால் வழி எங்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை இடத்தை சென்னை கொண்டுவரப்பட்ட மீரா மிதுனிடம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு அறையில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.