குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீராமிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை யூடியூப்பில் பதிவிட்ட மீரா மிதுன் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதோடு, அவர்களை திரைத்துறையில் இருந்து அகற்றுவது அவசியம் எனவும் தெரிவித்திருந்தார்.
மீரா மிதுன் வெளியிட்ட இந்த வீடியோ பெரும் சர்ச்சைகளை கிளப்பிய நிலையில்,அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டது. ஆனால் என்னை கைது செய்வது என்பது நடக்காது.அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும் என மிரட்டல் விடுக்கும் வகையில் மீராமிதுன் மீண்டும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மீரா மிதுன் போலிஸார் கைது செய்ய வந்த போது, தன்னை தானே கத்தியால் குத்திக்கொள்வேன் என்று கதறி கூச்சலிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.