மக்கள் ஆதரவு கொடுத்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரணாவத்,நடிகர்கள் அரவிந்த்சாமி,சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவான ‘தலைவி’ திரைப்படம் நேற்று தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபகாலமாக பெரும் சர்ச்சைகளுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திடம் செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் திட்டம் உண்டா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய அவர் நான் தேசியவாதி என்பதால் நாடு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை பேசுவேன். இதனால் மக்கள் நான் அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதாக நினைக்கின்றனர். இரண்டும் ஒன்றுபோல் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை. ஏனென்றால் நான் அரசியல்வாதி கிடையாது என கூறியுள்ளார்.
மேலும் நான் பொறுப்புள்ள இந்திய நாட்டின் குடிமகனாக பேசுகிறேன். மக்களால் பிரபலப்படுத்தப்பட்ட நான் மக்களின் உரிமைக்காகவும், நாட்டிற்காகவும் பேசுகிறேன். அதேசமயம் நான் அரசியல்வாதி ஆவதா இல்லையா என்பது எனது கையில் இல்லை.
காரணம் மக்களின் ஆதரவு இல்லாமல் பஞ்சாயத்துத் தேர்தலில் கூட நம்மால் வெற்றி பெற முடியாது.
அரசியலில் சேருவதாக இருந்தால் மக்கள் என்னை விரும்புவதாக இருக்கவேண்டும். இப்போது நல்ல நடிகையாக இருப்பதாக நினைக்கிறேன். இதில் எனக்கு மகிழ்ச்சி. எதிர்காலத்தில் மக்கள் விரும்பி என்னை தேர்ந்தெடுத்தால் நான் அதனை நிச்சயம் அன்போடு ஏற்றுக்கொள்வேன் என்றும் கங்கனா கூறியுள்ளார்.
மக்களின் மனதில் இடம்பிடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை திரையில் அரசியல்வாதியாக நடித்தபோது தெரிந்து கொண்டேன். அரசியல்வாதிகள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் அடிமட்டத்தில் என்ன செய்தார்கள் என்று மக்களுக்குத் தெரிவதில்லை.
அரசியல் என்பது சதுரங்கம் விளையாடுவது போன்றது. உங்களது நண்பர்கள் நாளை உங்களது எதிரியாக மாறலாம். உங்களது உயிருக்கே அச்சுறுத்தலாக அமையலாம். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் அரசியல்வாதிகள் குறித்து கணித்துவிடுகிறோம். அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடுகிறோம்” என்றும் கங்கனா புகழாரம் சூட்டியுள்ளார்.