திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராக இருந்து குறளை எழுதினார் – என்ற பேரா.தெய்வநாயகத்தின் கருத்து ஆய்வுக்கு உரியது திருமாவளவன் கருத்து தெரிவித்து உள்ளார். இந்தக் கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இங்கு அடிப்படையில் கவனிக்க வேண்டியது திருவள்ளுவர் பிறந்த ஆண்டு என ஆய்வாளர்கள் கூறுவது கி.மு.31ஆம் ஆண்டு, ஏசு பிறந்தது என்று ஆய்வாளர்கள் கூறுவது கி.மு.6ஆம் ஆண்டு (ஆமாம் வரலாற்றின்படி கி.மு.என்பது கிறிஸ்துவுக்கு முன் அல்ல!.).
அடுத்து ஏசு பிறந்த உடன் அல்லது அவர் இறந்த உடன் கிறிஸ்தவம் உருவாகி பரவி விடவில்லை. ஏசு இறக்கும்போது அவரே ஒரு யூதராகத்தான் இறந்தார். ஏசு இறந்த பின்னர் அவரது சீடர்கள் அனைவரும் வேட்டையாடப்பட்ட பின்னர் வெகுகாலம் கழித்து போப்புகள்தான் ஏசுவைக் கையில் எடுத்து ஒரு புதிய மதத்தை உருவாக்குகின்றனர். கிறிஸ்தவம் என்ற மதம் திருவள்ளுவருக்கு குறைந்தது ஒரு நூற்றாண்டாவது இளைய மதமாக இருக்கும்.
அடுத்து, ஏசுவின் கொள்கைகளும் திருவள்ளுவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதன் காரணத்தைப் பார்த்தால், ஐரோப்பாவின் சட்டங்கள் ஹெமுராபியின் ‘கண்ணுக்குக் கண்… பல்லுக்குப் பல்’ என்ற தோற்றத்தில் உருவாகின.
பண்டைய இந்திய மதச் சட்டங்கள் மற்கலி, புத்தர், மகாவீரர் இவர்களின் தாக்கத்தால் மன்னிப்பை போதித்தன.ஐரோப்பிய வரலாற்றில் ‘ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தைக் காட்டு’ என்று சொன்ன முதல் நபர் ஏசு. ஆனால் இந்திய வரலாற்றில் மற்கலி, புத்தர், மகாவீரர், திருவள்ளுவர் எனப் பலரும் வலியுறுதிய கருத்தாக்கம் அது. எனவே மன்னிப்பு என்ற கருத்தாக்கத்தை கிறிஸ்தவம் பண்டைய இந்தியாவில் இருந்து எடுத்தது என்று கொள்வதே சரி.
இது போக மதம், மத நூல், மிஷனரிகள் மூலம் மதம் பரப்புதல், சிஸ்டர் முறை – என கிறிஸ்தவ மதத்தில் உள்ள அனைத்தும் புத்த மதத்தின் நேரடி சாயலைக் கொண்டவை. இதனால் ஏசுவே இந்தியா வந்து சில ஆண்டுகள் இங்கு தங்கி புத்த மதத்தின் அடிப்படைகளைக் கற்று, புதிய கருத்தாக்கத்தைப் பெற்றார் என நம்பப்படுகிறது. இதற்கு துணை செய்யும் விதமாக ஏசுவின் வரலாற்றில் பல ஆண்டுகள் அவர் எங்கே இருந்தார்? – என்ற குறிப்பே இல்லை.
பிபிசி தொலைக்காட்சியே ‘ஜீசஸ் வாஸ் எ புத்திஸ்ட் மாங்க்’ – என்று ஒரு விரிவான ஆவணப் படத்தை வெளியிட்டு உள்ளது. ஐரோப்பியர்களே ‘புத்தத்தில் இருந்து வந்தது கிறிஸ்தவம்’ என்று கூறும்போது, தமிழர்கள் தலைகீழாக கருத்துக் கூற வேண்டிய தேவை என்ன? – தெரியவில்லை.
புத்தம் குறித்து அதிகம் பேசும் திருமாவளவன் அவர்கள் கிறிஸ்தவத்துக்கும் புத்தத்துக்கும் உள்ள நேரடித் தொடர்பை அறியவில்லையா? அல்லது சைவம் மீதான தாக்குதலுக்கு அவர் கிறிஸ்தவத்தையும் உடன் சேர்த்துக் கொள்கிறாரா என்பதும் புரியவில்லை. அடுத்து அவர் தரப்பினர் ‘புத்தர் வாஸ் எ கிறிஸ்டியன் மாங்க்’ என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை!.
ஏசு ஒரு கிறிஸ்தவர் – என்று எழுதிய பேரா.தெய்வநாயகம் ஒரு பாதிரியார். எனவே அவரது நோக்கத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு பாதிரியாரின் சிந்தனையை வரலாற்று ஆய்வாக மேற்கோள் காட்டுபவர்களின் நோக்கத்தைத்தான் புரிந்து கொள்ள இயலவில்லை.
இவை அனைத்துக்கும் மேல் பேரா.தெய்வநாயகத்தின் கருத்து அவரது கண் முன்பாகவே அடித்து துவைத்து நிராகரிக்கப்பட்ட கருத்துகளில் ஒன்று. பேரா.தெய்வநாயகத்தின் நூலில் உள்ள சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழை, கருத்துப் பொருந்தாமை இவற்றை விளக்கி ‘திருக்குறள் விவிலியம் சைவசிந்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்’ – என ஒரு நூலே எழுதப்பட்டு உள்ளது.
எனவே, ஏற்கனவே முடிந்த விவாதம் இங்கு மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. ஆதாரமும் தேவையும் இல்லாத விவாதம் இது.
– இரா.மன்னர் மன்னன்