1957ஆம் ஆண்டில் வெளியான ஹெச்.எம்.படேல் கையெழுத்துடன் கூடிய ரூ.1 பணத்தாள் ஒரு இணைய தளத்தால் 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளப்படுகின்றது – என்று ஒரு செய்தியை பிரபல செய்தி ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. இதன் உண்மைத் தன்மையைப் பார்ப்போம்…
முதலாவதாக, ஒரு ரூபாய் நோட்டை 45,000 ரூபாய்க்கு வாங்கும் இணையதளமாக செய்திகளில் கூறப்பட்ட ‘காயின்பஜார் டாட் காம்’ என்பது ஒரு நாணய விற்பனையாளர் அல்ல. அது ஒரு மின் வர்த்தக செய்தித்தளம். ஈபே, அமேசான், பிளிப்கார்ட் போல. மேலும், அந்த தளம் வாயிலாக நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கும் பதிவு பெற்ற நிறுவனங்கள்தான் வியாபாரம் செய்கின்றனர். இந்த தளத்தில் உரிமையாளர்கள் நாணயங்களையோ பணத்தாள்களையோ வாங்குவதோ விற்பதோ இல்லை.
அந்த தளத்தில் ஓவியா கலெக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தினர் வெளியிட்ட வணிக அறிவிப்பை ஊடகத்தினர் தவறாகப் புரிந்து கொண்டதால்தான் முழு சிக்கலும் ஏற்பட்டு உள்ளது. ஓவியா கலெக்ஷன்ஸ் நிறுவனத்தினர் தங்களிடம் உள்ள பொருளின் விலை 45 ஆயிரம் ரூபாய்கள் (துல்லியமாக 44,999 ரூபாய்கள்) என்று கூறி உள்ளார்களே தவிர, தாங்கள் இந்த விலைக்கு வாங்கிக் கொள்வோம் என்று கூறவில்லை.
ஓவியா கலெக்ஷன்ஸ் நிறுவனமோ, காயின் பஜார் தளமோ மக்களிடம் இருந்து பணத்தாள்களை வாங்கிக் கொள்வதாக எங்கும் கூறவில்லை. இவர்களிடம் சேகரிப்பாளர்கள் பொருட்களை வாங்க முடியுமே தவிர விற்க முடியாது.
மேலும் இந்த வணிக அறிவிப்பில் அவர்கள் 1957ஆம் ஆண்டின் ஒற்றை ஒருரூபாய் நோட்டின் விலை ரூ.45,000 என்று கூறவில்லை. ரூ.1 நோட்டுகள் 100 சேர்ந்த ஒரு கட்டு (பண்டில்)தான் இங்கு விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. 100 நோட்டுகளின் விலையை ஒரு நோட்டின் விலை என்று ஊடகத்தினர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
எனவே 1957ஆம் ஆண்டின் ரூ.1 பணத்தாள் 45 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும் என்ற செய்தியானது தவறான புரிதலால் உருவான புரளி மட்டுமே ஆகும். 1957ஆம் ஆண்டின் ஹெச்.எம்.படேல் கையெழுத்து உள்ள பணத்தாள் உண்மையில் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையில் மட்டுமே விலை மதிப்பு உள்ளது என்றும், இந்த விலை மதிப்புக்கே அந்த பணத்தாள் கசங்காமல், கிழியாமல் நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்றும் பணத்தாள் சேகரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பான விரிவான விவரங்களை இந்த காணொலியில் காணலாம்.
காயின்பஜார் டாட் காமில் வணிக அறிவிப்பு வெளியான லிங்க்:
https://coinbazzar.com/shop/note-bundles/offer-till-1200-extremely-rare-for-collectors-one-rupee-bundle-1957-signed-by-h-m-patel-with-jumbling-number-123456/
- இரா.மன்னர் மன்னன்