சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டு உள்ளதை சென்னை மக்களோடு கடலூர் மக்களும் கொண்டாடி வருகின்றனர். கடலூர் மக்களால் ‘வாழும் பென்னிகுவிக்’ என்று அழைக்கப்படும் ககன் தீப் சிங் பேடி அந்த பெயருக்கு ஏற்றபடி செய்த சாதனை என்ன? – விரிவாகப் பார்ப்போம்…
ஊரக வளர்ச்சி, வேளாண்மை, பேரிடர் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் நீண்ட அனுபவம் உள்ளவர் இ.ஆ.ப. அதிகாரி ககன் தீப் சிங் பேடி. ஏற்கனவே மதுரை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர். கடலூரைப் புயல் பாதித்த போது இவர் களத்தில் காட்டிய வேகம் தமிழகமே இவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால் இது அத்தனையையும் விட மிகப் பெரிய சாதனை இவரால் நடந்த கடலூர் வாலாஜா ஏரி மீட்புதான்.
இந்தியா முழுக்க நீர் நிலைகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. அதை மக்களும் அரசும் வேடிக்கை பார்த்தும் வருகிறார்கள். இந்நிலையில் மக்களும் அரசும் ஒன்றாக இணைந்து ஒரு ஏரியை மீட்ட சம்பவம் கடலூரில்தான் முதன்முதலாக நடந்தது. அதற்கு வித்திட்டவர் ககன் தீப் சிங் பேடி.
ஒரு காலத்தில் வளமான ஊராக இருந்து, பின்னர் வறட்சியின் ஊராக மாறிய பகுதிதான் கடலூர். அங்கு விவசாயிகள் தற்கொலைகள் கூட தொடர்ந்து அதிகரித்தன. சுமார் 60 ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் இருந்த கடலூரை ககன் தீப் சிங் பேடியின் ஆலோசனை இப்போது மீட்டு உள்ளது. இன்று கடலூரில் மிகப் பரவலாக பசுமை தென்படுகின்றது.
கடலூரில் 1664 ஏக்கர் பரப்பளவில் வாலாஜா ஏரி – என்ற ஒரு பெரிய ஏரி இருந்தது. 12 வாய்க்கால்களையும் 15 கதவுகளையும் கொண்ட அந்த ஏரி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் வருகைக்குப் பின்னர், நிலக்கரியை எடுக்கும் போது வெளியேறும் சேற்று நீரால் கேட்பாரற்று அழிந்து போனது. ஆனால் அதன் எச்சங்கள் மட்டும் புதர்களின் மத்தியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தன.
அதுவரை சில ஆவணங்களிலும் சிலர் நினைவுகளிலும் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த வாலாஜா ஏரியைப் பற்றி 2003ஆம் ஆண்டில் துரைக்கண்ணு என்ற பொறியாளரிடம் ககன் தீப் சிங் பேடி கூறினார். அந்த ஏரி மீட்கப்பட்டால் கடலூர் விவசாயிகளுக்கு மறு வாழ்வு கிடைக்கும் என்பதோடு, மழைநீரால் ஏற்படும் சேதங்களும் குறையும் என்று அவர் விளக்கினார். ஏரி தூர்ந்து போகக் காரணம் நெய்வேலி நிலக்கரி நிறுவனம்தான் என்பதால் அந்த நிறுவனம் ஏரியை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால் அப்போதே திட்டச் செலவு ரூ.60 கோடியாக இருந்ததாலும், ரூ.10 கோடி கூட இல்லாமல் திட்டத்தைத் தொடங்கவே முடியாது என்பதாலும் ஏரி மீட்புப் பணிகள் தள்ளிப் போயின. ஆனாலும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுப்பதை ககந்தீப் சிங் பேடி அவர்கள் நிறுத்தவே இல்லை.
ஆனால் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பிறர் யாரும் இவருக்கு தோள் கொடுக்கவில்லை. பின்னர் கடலூர் மாவட்ட விவசாயிகள் இதற்காக போராடத் தொடங்கினார்கள். தொடக்கத்தில் இந்தப் போராட்டங்களும் கண்டுகொள்ளப்படவில்லை என்றாலும் 10 ஆண்டுகளுக்கும் மேலான தொடர் நடவடிக்கைகளால் அதிகாரத்தில் உள்ளவர்கள் சற்று அசைய ஆரம்பித்தார்கள்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஏரியின் ஒரு பகுதியை மீட்க முழுத் தொகையையும் தர சம்மதம் தெரிவித்தது.
ஆனால் இந்த தூர்வாரும் பணியை செய்ய வேண்டும் என்றால் அப்போது நீர் சென்று கொண்டிருந்த 15 வாய்க்கால்களில் நீர் திறப்பை நிறுத்த வேண்டும். இதனை மக்களிடம் பொறியாளர் சொல்ல, மக்களும் முழு மனதோடு ஓராண்டு விவசாயத்தைக் கைவிட சம்மதித்தனர்.
இதனால் 2014ஆம் ஆண்டில் சுமார் 13 கோடி செலவில் திட்டப்பணிகள் தொடங்கின. இந்தத் திட்டத்தை பொறியாளர் துரைக்கண்ணுவே செயல்படுத்தினார். உள்ளூர் மக்கள், விவசாயிகள் பலரும் ஏரி மீட்பு வேலையில் களம் இறங்கினர். பொறியாளர்கள் கூட ஏரிக்கு அருகிலேயே படுத்துத் தூங்கிய அதிசயத்தைக் கடலூர் பார்த்தது.
ஊர் கூடித் தேர் இழுத்ததால் ஓராண்டில் முடிக்க வேண்டிய வேலை நான்கே மாதங்களில் முடிந்தது. இன்று புதுப்பிக்கப்பட்ட வாலாஜா ஏரியில் இருந்து 12 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெற்று உள்ளன. கடலூர் வறட்சியில் இருந்து மீண்டு உள்ளது. இவ்வளவுக்கும் தொடக்கமாகவும், தூண்டுகோலாகவும், துணையாகவும் இருந்தவர் ககன் தீப் சிங் பேடி அவர்கள்தான்.
இதனால்தான் மேற்கத்திய நாட்டில் இருந்து வந்து முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக்-கின் சாதனைக்கு இணையாக கடலூர் மக்கள் இவரது சாதனையைப் போற்றுகிறார்கள். சென்னையில் இவர் அடுத்து என்ன செய்யப் போகிறார்? – என மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
– இரா.மன்னர் மன்னன்