இளைஞர்களின் எனர்ஜி டானிக் ,கொஞ்ச நேரம் பேசினாலும் அவர் நாகர்கோவில்காரர் என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
பேச்சில் மண் வாசனை மாறாத சைலேந்திர பாபு ஐபிஎஸ், மிடுக்கான தோற்றத்தில் தோற்றத்தில் மட்டுமல்ல, பணியிலும் உச்சம் தொட்டவர்.
இன்று தமிழ்நாட்டின் 30-வது சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
யார் இந்த சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.?:
சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். . 34 வருடங்கள் காவல் பணியில் இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்.
மதுரையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். 1987 ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வு பெற்றார்
1997-ல் சிவகங்கை பகுதியில் மழை, வெள்ளம் கரைபுரண்டு ஒடிக்கொண்டிருந்த நேரம் அப்போது பயணிகளை ஏற்றி வந்த பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக நீர் நிறைந்த கண்மாயில் எதிர்பாராத விதமாக உடைந்து மூழ்கியது.
அப்போது காரில் வேறு பணிக்காக பயணித்துக்கொண்டிருந்த சைலேந்திரபாபு. பஸ் மூழ்குவதை கவனித்து, உடனே கண்மாய் உள்ளே பாய்ந்து, பஸ்ஸின் ஜன்னல்களை உடைத்து 16 பேரை உயிருடன் காப்பாற்றினார்.
இதேபோல், 2015-ல் சென்னை மாநகரம் மழை வெள்ளத்தில் மூழ்கியது போது மிதவை படகில் தனது குழுவோடு பயணித்து வெள்ளத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை மீட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துவந்தார்.
வீரப்பனுக்கு சிம்ம சொப்பனம்:
1990-களில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைய ஏ.எஸ்.பி-யாக பணியில் இருந்தார் சைலேந்திரபாபு.
அப்போது சந்தனக் கடத்தல் வீரப்பன் கோஷ்டிக்கும் போலீஸாருக்கும் நேரடியான மோதல் சம்பவங்கள் நடந்தன.
சில சமயம் வீரப்பன் கூட்டத்தை சேர்ந்தவர்கள் கிராமங்களில் பஸ் போக்குவரத்தை தடை செய்யும் விதமாக சாலையில் மரங்களை வெட்டிப்போட்டு தடை ஏற்படுத்தியிருந்தனர்.
அப்போதெல்லாம் இவர் அரசு பேருந்தினை ஒட்டிசெல்வாராம் , பேருந்துகளை சைலேந்திரபாபு இயக்கியதைப் பார்த்த வீரப்பன் கோஷ்டியினர் அதிர்ந்தனர்.
இன்னும் சொல்லப்போனால் வீரப்பனுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்கள் 5 பேர்கள். கர்நாடகாவை சேர்ந்த அதிகாரிகளான எஸ்.பி-யான ஹரிகிருஷ்ணா, டி.எஃப். ஒ சீனிவாசஸ், எஸ்.ஐ. ஷகீல், எஸ்.ஐ. தினேஷ் மற்றும் சைலேந்திரபாபு.
இதில் சைலேந்திரபாபு தவிர மற்ற நான்கு அதிகாரிகளும் வீரப்பனால் இரண்டே ஆண்டுகளில் கொல்லப்பட்டனர். ஆனால் சைலேந்திரபாபுவை வீரப்பன் தரப்பினரால் நெருங்கமுடியவில்லை
.கோவை ஹீரோ:
2010-ல் கோவை சிட்டி கமிஷனராக சைலேந்திரபாபு இருந்தார். அப்போது தமிழகத்தை உலுக்கும் ஒரு கொடூர சம்பவம் நடந்தது.
ஒரு குடும்பத்தை சேர்ந்த சிறுமி, அவளது தம்பி…இருவரையும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் டிரைவர் பாலியல் வன்கொடுமைசெய்து கொலை செய்தான்.
இந்த விவகாரம் பற்றி போலீஸுக்கு தகவல் போனதும், மோகன்ராஜ்-யையும் அவனுக்கு உடந்தையாக இருந்தவனையும் பிடித்தனர். பிறகு நடந்த என்கவுன்டரில் மோகன்ராஜ் கொல்லப்பட்டான்.
கோவையில் கமிஷனராக இருந்த கால கட்டம் தன் மனதுக்கு நெருக்கமான காலக்கட்டம் என்றுகோவை மக்களின் பாசத்தை ஒருமுறை நினைவு கூர்ந்தார் சைலேந்திர பாபு.
கோவை மக்கள் தங்களின் தேவையை உரிமையோடு என்னிடம் கூறுவார்கள் அங்கு, அடிக்கடி மாணவர்கள் என்னை நேரில் சந்தித்துப் பேசுவார்கள் அதுதான் மாணவர்களுடனான நெருக்கமான பயணத்துக்குத் தொடக்கம் என கூறியிருந்தார்.
அன்று முதல் இன்று வரை இவர் இளைஞர்களை ஊக்குவிப்பதற்கு என்றுமே தயங்கியதில்லை. இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாட்டின் 30-வது சட்டம் ஒழுங்கு டிஜிபி-யாக பதவியேற்கிறார் .