துபாய்:
சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் வந்துவிட்டது ஐபிஎல். அதில் மீண்டும் புது தெம்புடன் புது வேகத்துடன் வந்துவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஐபிஎல் 2021 போட்டியோட இரண்டாம் பாகமா நேற்றைக்கு துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ரொம்ப நாளைக்கு பிறகு ஐபிஎல் போட்டி, அதுவும் இந்தியா பாகிஸ்தான் போட்டி மாதிரி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் போட்டி. சென்னை மக்களுக்கு சொல்லவே வேண்டாம் விசிலோட தயாராகிட்டாங்க. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, ரசிகர்களும் அதையேத்தான் எதிர்ப்பார்த்தார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சாம் கரன் இல்லை அவருக்கு பதில் ப்ராவோ மற்றும் ஹசில்வுட் இணைந்திருந்தார்கள்.
மும்பை இண்டியன்ஸ் அணியில் முக்கியமான இரண்டு வீரர்கள் இல்லை ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா. அவர்களுக்கு பதில் அன்மோல்ப்ரீத் மற்றும் செளரப் திவாரி இடம் பெற்றிருந்தனர்.
காயம் காரணமாக ஆடுவாரா மாட்டாரா என்று எதிர்ப்பார்த்திருந்த டூப்ளஸி களத்தில் இறங்க உற்சாகமாகினர் சென்னை ரசிகர்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸின் பவர்பிளே ஆட்டம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. சென்னை அணியில் முதலில் ஆட வந்தனர் டூப்ளஸி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட். கொஞ்சம் தடுமாற்றமாக காணப்பட்ட டூப்ளஸி இவரால் ஆட முடியுமா என்று யோசிக்கும் போதே ஆட்டத்தின் முதல் ஓவர், போல்ட்டின் பந்தில் கேட்ச் கொடுத்து டக் அவுட்டில் வெளியேறினார். இதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோண்லயே இருந்திருக்கலாம். சரி இவர் இல்லை என்றால் என்ன மொயின் அலி இருக்காரே என்று சந்தோஷப்படுவதற்குள், ஆட்டத்தின் 2 ஓவரில் மில்னேவின் பந்தில் டக் அவுட்டில் வெளியேறி டூப்ளஸிக்கு கம்பெனி கொடுக்க சென்றுவிட்டார் மொயின் அலி.
அடுத்து வந்த ராயுடு, மில்னேவின் பந்தில் கையில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். இதோ வந்துடான்ல என் சிங்கம் என்பது போல் வந்தார் ரெய்னா. 3 வது ஓவரில் போல்ட்டின் பந்தில் முதல் மூன்று பந்துகளுக்கு ரன் ஓடவில்லை, நான்காவது பந்தில் அவுட்சைட் எட்ஜ்ஜில் பட்டு அதிர்ஷ்டவசமாக தெர்டு மேன் திசையில் சென்று ஃபோர் போனது அந்த பந்து. அந்த பந்து எப்படி ஃபோருக்கு போச்சுன்னு அந்த பந்துக்கே தெரியல, அதுக்குள்ள மறுபடியும் அதே மாதிரி தூக்கினா மறுபடியும் பந்து போகுமா, ஆனா போச்சு, ராகுல் சஹர்கிட்ட போய் அவுட்டாகினார் ரெய்னா. சரி பரவாயில்லை… அடுத்து உண்மையிலேயே சிங்கம் போல் வந்தார் தோனி. ஆனால் தோனியின் வருகையை கொண்டாடும் நிலையில் ரசிகர்கள் இல்லை என்று இருந்தது அந்த சூழ்நிலை. அவரும் வழக்கம்போல் மூன்று ரன்களை தட்டி பவர்பிளே ஓவரின் கடைசி பந்து, போல்ட்டின் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். பவர்பிளே முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ருதுராஜ் கெய்க்வாட்
அடுத்து களத்தில் இறங்கினார் ஜடேஜா. ஜடேஜா மற்றும் ருதுராஜ். நீயும் அவுட்டாகிடாத டா என்று ஜடேஜாவை ஏக்கமாக பார்த்தார்கள் ரசிகர்கள். ஆனால் முதல் பந்தில் இருந்து பொறுமையாகவும், நிதானமாகவும் ஆட்டத்தை கொண்டு சென்று சென்னைக்கு வெற்றி வாகை சூட்டினார் ருதுராஜ் கெய்க்வாட். அந்த பையனுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன் என்று சொல்லும்படியாக இருந்தது கெய்க்வாட்டின் ஆட்டம்.
ஜடேஜா மற்றும் ருதுராஜின் கூட்டணி நன்றாகவே விளையாடி ரன்களை எடுத்தனர். 15 ஓவர் முடிவில் 87 ரன்கள் எடுத்திருந்தது. 16ஆவது ஓவரில் பொலார்டின் பந்தில் இரண்டு பவுண்டரிகளை தட்டி தனது அரை சதத்தை அடித்தார் கெய்க்வாட். ஜடேஜா மற்றும் கெய்க்வாட்டின் கூட்டணி 89 ரன்களை எடுத்தது. இறுதியில் 17 வது ஓவரில் பும்ராவின் பந்தில் கேட்ச் ஆகி அவுட்டாகினார் ஜடேஜா. அடுத்து களத்தில் இறங்கினார் ப்ராவோ, சரியான நேரம் கடைசி 3 ஓவர்கள் தான் உள்ளது. அடிச்சி தூக்கியாகனும் என்பது போலவே வந்தார்.
18 வது ஓவரில் மில்னேவின் பந்தில் ப்ராவோவின் சிக்ஸர் அடியில் 117 ரன்களை எடுத்தது சென்னை அணி. 19ஆவது ஓவர் போல்ட்டின் பந்தில், ப்ராவோவின் 2 சிக்ஸர் மற்றும் கெய்க்வாட்டின் 1 பவுண்டரி, 1 சிக்ஸர் என ஒரே ஓவரில் 24 ரன்கள் எடுத்து மொத்தம் 141 ரன்களைத் தொட்டனர்.
கடைசி ஓவர் பும்ராவின் பந்தில், சிம்பிள் கேட்ச்சில் ப்ராவோ அவுட்டாகினாலும் 8 பந்துகளுக்கு 23 ரன்கள் எடுத்து கெத்தாகவே வெளியேறினார். கடைசி நான்கு பந்தில் 1 பவுண்டரி, கடைசி பந்தில் சிக்ஸர் என நிதானமாக ஆட்டத்தை தன் கைக்குள் வைத்து, 156 ரன்களை எடுக்க வைத்து, மிகப்பெரிய சரிவில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸின் தோல்வியை தடுத்து நிறுத்தினார் கெய்க்வாட். 58 பந்துகளுக்கு 88 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் கெத்து காட்டினார் கெய்க்வாட்.
மும்பை இண்டியன்ஸ்
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கினார்கள் டிகாக் மற்றும் அன்மோல்ப்ரீத். ஃபீல்டிங்கிலும் தட்டு தடுமாறியது சென்னை, ஹசில்வுட்டின் முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை தட்டினார் டிகாக்.
இந்த விக்கெட் எடுத்தால் தான் சென்னை அணிக்கு நல்லது என்று நினைக்கையில் கைக்கு வந்த கேட்ச்சை நழுவவிட்டார் கெய்க்வாட். மும்பைக்கு அப்போதே சங்கு ஊதி இருக்கலாம். ஆனால் டிகாக்கின் முடிவு வெகு தொலைவில் இல்லை என்பது போல் இருந்தது அடுத்த ஓவர்.
ஆட்டத்தின் 3 ஓவரில் தீபக்கின் மிடில் லெந்த் பந்தை தட்ட, தீபக் சஹர் விக்கெட் என்று உற்சாகமானார். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை, அம்பயருக்கே தெரியாத ஆங்கிள் எல்லாம் தோனிக்கு தெரியுமே, உடனே ரிவ்யூ கேக்க அவுட்டானது டிகாக் என்னும் முக்கிய விக்கெட். இந்த ஒரு விக்கெட் போதுமா தீபக் சஹருக்கு. பவர்பிளே ராஜா என்றால் சும்மா என்ன… என்பது போல் 5ஆவது ஓவரில் அன்மோல்ப்ரீதி விக்கெட்டையும் எடுத்து பவர்பிளே பிளேயர் என்ர பெயரை தக்கவைத்து கொண்டார் தீபக். நானும் சளைத்தவன் அல்ல என்று பவர்பிளேவின் கடைசி ஓவருக்கு வந்த தாக்கூர், தன் பங்கிற்கு சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை எடுக்க… மும்பை இண்டியன்சை தடுமாற வைத்தார்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்.
ப்ராவோ
திவாரியும் கிஷணும் மிடில் ஓவரில் மெதுவாக ரன்களை எடுக்க, கிஷணின் விக்கெட்டை தட்ட எதிர்ப்பார்த்தார் ப்ராவோ. அதற்கு சரியாக ஒத்துழைத்து, ஷார்ட் கவரில் நின்றிருந்த ரெய்னா கைக்கு வந்த பந்தை லாவகமாக பிடித்து அவுட்டாகினார் கிஷணை. அந்த விக்கெட்டின் முடிவில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. மும்பை இண்டியன்ஸின் நம்பிக்கை நட்சத்திரமாக வந்த பொல்லார்ட்டை பார்த்து, சென்னை அணியும் சற்று ஜர்க் ஆனது என்னவோ உண்மை தான். சென்னை அணியின் பெரிய டார்க்கெட்டை தகர்க்க ப்ராவோ, தாக்கூர், ஜடேஜா பந்து வீச, வாய்ப்பு ஹசில்வுட்டுக்கு சென்றது. பொலார்ட்டுக்கு கெட்ட நேரமோ, ஹசில்வுட்டுக்கு நல்ல நேரமோ அது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம், ஹசில்வுட்டின் பந்தில், எல்பிடபிள்யூவில் வெளியேறினார் மும்பையின் நம்பிக்கை நட்சத்திரம் பொலார்ட். வெளிநாட்டுகாரன்னா சும்மாவா(ஹசில்வுட்). சென்னையின் வெற்றி வெளிச்சம் பிரகாசமானது.
அடுத்து வந்த க்ருணாலும் ரன் அவுட்டாகிட, சென்னை ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் திவாரியின் விக்கெட் இன்னும் இருக்கே என்று பார்த்து இருந்த சென்னை அணி, திவாரியை டார்கெட் செய்ய கை மேல் பலன் கிடைத்தது போல் வந்தது அழகான கேட்ச். ஆனால் தோனியும் ப்ராவோவும், அவர் பிடிப்பார் என்று இவரும், இவர் பிடிப்பார் என்று அவரும் எண்ணி கேட்சை இருவரும் நழுவவிட்டனர். பிடித்திருந்தால் ஆட்டம் அப்போதே முடிந்திருக்கும் என்பது வேறு.
இறுதியாக ஆட்டத்தின் கடைசி ஓவரில், திவாரி தன் பங்கிற்கு தன் அரை சதத்தை அடித்து கொடுத்தார். ப்ராவோவும் தன் பங்கிற்கு மில்னே மற்றும் ராகுல்சஹாரின் விக்கெட்டை எடுத்து சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தார். மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த ஐபிஎல்லின் 8 போட்டிகளில் 6 போட்டிகளை வென்று முதல் இடத்திற்கு சென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை நடந்த போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று, 4 போட்டிகளில் தோல்வி அடைந்து, 4ஆவது இடத்தில் இருக்கும் மும்பை இண்டியன்ஸுக்கு இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. இப்போதும் மும்பை இண்டியன்ஸுக்கு பிளே ஆஃப்பிற்கு வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. சென்னை சூப்பர் கிங்ஸின் ஆட்டமே இனிமே தான் என்று இருந்தது இந்த வெற்றி….
– சே.கஸ்தூரிபாய்