தமிழக நாணயங்களின் வரலாற்றில் இராஜராஜன் பெற்ற இடம் மிக முக்கியமானது ஆகும். தமிழகத்தில் கிடைக்கும் பழைய நாணயங்களில் சுமார் 70% காசுகள் இராஜராஜனின் வெளியிட்ட காசுகளாக உள்ளன. அந்த அளவிற்கு இராஜராஜன் அதிக காசுகளை வெளியிட்டு உள்ளார். அவரது பெயர் பொறித்த காசுகள் சோழர் ஆட்சி முடிவுக்கு வரும்வரை புழங்கி இருக்க வேண்டும்.
இராஜராஜனின் நாடுகள் பிற நாடுகளிலும் புழங்கியதால், தமிழ் மொழியின் இன்னொரு எழுத்து வடிவமான நாகரியை இராஜராஜன் பயன்படுத்தினார். இதனால் இராஜராஜனின் காசுகளை பிற மொழிக்காசுகள் என்று பலர் தவறாக எண்ணுகின்றனர். கி.பி.12ஆம் நூற்றாண்டில்தான் இந்தி மொழி நாகரியை பயன்படுட்தியது, ஆனால் அதற்கு முன்பே தமிழகம் நாகரியை பயன்படுத்தி உள்ளது. அதனால் நாகரி வட இந்தியர்களை விட நமக்கே உரிமை உள்ள எழுத்து வடிவம்.
சோழர் வரலாற்றில் சங்ககாலம் முதல் தங்க நாணயங்கள் வெளியிடப்பட்டது இல்லை. சோழர்களில் முதன்முதலில் தங்க நாணயம் வெளியிட்ட அரசர் இராஜராஜ சோழனே ஆவார்.
இராஜராஜன் தங்கம் தவிர வெள்ளி, செம்பு, தூய செம்பு, வெங்கலம், காரீயம் – என அன்றைக்கு வழக்கத்தில் இருந்த அனைத்து உலோகங்களிலும் நாணயங்களை வெளியிட்டார்.
இவற்றில் தூய செம்பு அப்போது தமிழகத்தில் அதிகம் கிடைக்கவில்லை. அதனால் அது இறக்குமதி செய்யப்பட்டு இருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதுபோக, தமிழக வரலாற்றில் முலாம் பூசப்பட்ட நாணயங்களின் வெற்றிகரமான வரலாற்றையும் இராஜராஜன் தொடங்கி வைத்தார். வெள்ளி நாணயங்களுக்கு தங்க முலாம், செம்பு நாணயங்களுக்கு வெள்ளி முலாம், அரிதாக செம்பு நாணயத்தின் மீது முதலில் வெள்ளியிலும் பின்னர் தங்கத்திலும் என இரட்டை முலாம் – என முலாம் பூசப்பட்ட நாணயங்களை இராஜராஜன் வெளியிட்டார். இதனால் குறைவான தங்கம், வெள்ளியைக் கொண்டே அதிக நாணயங்களை வெளியிட முடிந்தது.
வேதியியல் என்ற துறையே இல்லாத காலகட்டத்தில் மூலிகைகளின் துணை கொண்டு இராஜராஜன் இதனை சாதித்தார். உலக அளவில் கி.பி.15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட எட்டாம் ஹென்றி மன்னர் செப்பு நாணயங்களுக்கு வெள்ளி முலாம் பூசி புழக்கத்தில் விட்டதே பெரிய சாதனையாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அந்த நாணயங்கள் காலப்போக்கில் அரிக்கப்பட்டதால் உள்ளே இருந்த செம்பு வெளியே தெரிந்தது.
அரசனின் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிக் காசில், முனைப்பாக இருந்த மூக்குப்பகுதி மட்டும் தேய்ந்தது. மக்கள் தங்கள் அரசனையே ‘செம்பு மூக்கன்’ என்று அழைக்கத் தொடங்கினார்.
ஆனால் இராஜராஜனின் நாணயங்கள் 1000 ஆண்டுகள் கழித்து இப்போதும் முலாம் போகாமல் கிடைக்கின்றன. இராஜராஜனின் காசுகளை கண்களால் பார்க்கும்போது எது தங்கக் காசு? எது தங்க-முலாம் காசு? – என்று நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது!. இதனால் இந்திய வரலாறு மட்டுமின்றி உலக நாணயவியல் ஆய்வுகளும் இராஜராஜனை வியந்தே பார்க்கின்றன.
- இரா.மன்னர் மன்னன், எழுத்தாளர்.