பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவராக நியமிக்க வேண்டும் என்று முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஒ.பன்னிர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
இந்தச் செயலை, இந்தக் கருவியால், இவன் முடிக்க வல்லவன் என்பதைத் தெரிந்து கொண்டு அவனிடம் அந்த வேலையை ஒப்படைக்க வேண்டும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு முரணாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் நியமிக்கப்பட்டு இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக கூறியுள்ளார்.
மேலும்,பள்ளி மாணவ, மாணவியருக்கு தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்வதும், தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதும் தான் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஆனால்,பட்டிமன்றம் என்ற போர்வையில், பெண்களை இழிவாகப் பேசுவதையும், அரசியல் கட்சித் தலைவர்களை நாகூசும் வகையில் வசைபாடுவதையும், நாகரிகமற்ற கருத்துக்களை, தவறான கருத்துக்களை, ஒழுக்கமற்ற கருத்துக்களை மக்கள் மனங்களில், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மனங்களில் விதைக்க முயற்சி செய்வதை வாடிக்கையாகக் கொண்டவர் திரு. லியோனி அவர்கள். இந்தப் பதவியில் நியமிப்பதன் மூலம் தவறான கருத்துக்கள் மாணவ, மாணவியரிடம் எடுத்துச் செல்லப்படுவதோடு,அவர்களின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்படும்.
அதே சமயம், பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், லியோனி வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதில் ஒன்றிய அரசு என அச்சிடப்படும்என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.