சொகுசுகாருக்கு வரி செலுத்த மறுத்த விவகாரத்தில், நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நிறுத்தி வைத்துள்ள உயர்நீதிமன்றம், பாக்கி வரியை உடனடியாக செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
கோரிக்கையை விசாரித்த உயர் நீதிமன்றம், மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் விதிக்கப்பட்ட அபராத தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும் என நீதிபதி கூறியிருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த விமர்சனத்தை திரும்பப் பெறக்கோரியும், அபராதத்தை வாபஸ் பெறவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார்.
வரிபாக்கியை செலுத்த தயாராக உள்ளதாகத் தெரிவித்த விஜய், தனி நீதிபதி தன்னை தேச விரோதி போல் பேசி இருப்பதை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் வரி பாக்கியை விரைவில் செலுத்தி, அதற்கான செலானை சமர்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.