மத்திய அரசு உருவாக்கிய புதிய சமூக வலைத்தள விதிகளை ஏற்றுக் கொள்வதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பெண்களின் பாதுகாப்பு, நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை ஆகியவற்றுக்கு எதிராக தகவல்கள் பகிரப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அனைத்து சமூக ஊடகங்களையும் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த பிப்ரவரி 25ம் தேதி இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) ஒழுங்குமுறை விதிகளை வெளியிட்டது.
பிரபல சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த விதிகளை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க 6 மாதம் அவகாசம் கேட்டிருந்தன. காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் தற்போது பேஸ்புக் நிறுவனம் அரசின் விதிகளுக்கு உட்பட்டு பின்பற்றுவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஒருசில செயலிகள் மத்திய அரசின் புதிய சமூக ஊடக வழிகாட்டுதலுக்கு இணங்குவதாக தெரிவித்தன. இறுதி நாளான இன்று இந்திய அரசின் விதிகளை ஏற்க தயாராக உள்ளதாகவும், கூடுதலாக தேவைப்படும் விளக்கங்கள் குறித்து இந்திய அரசுடன் பேச உள்ளதாகவும் பேஸ்புக் அறிவித்து உள்ளது.
தற்போது வரை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை புதிய விதிகளை ஏற்கவில்லை என அரசு தெரிவித்துள்ளது. இந்த செயலிகள் தடை செய்யப்படுமா என்பது நாளை தான் தெரியவரும்.
- பிரியா வேலு