வீட்டிலேயே கொரோனா தொற்றை பரிசோதிக்கும் கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) அனுமதி அளித்து உள்ளது.
கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையில், பரிசோதனைகளை அதிகரிப்பதும் முக்கிய பணி ஆகும். இதன் மூலம் தொற்று பாதித்தவர்களை விரைவில் கண்டறிந்து தனிமைப்படுத்தினால் வைரஸ் சங்கிலி உடைபடும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
எனவே பரிசோதனைக்கு மத்திய-மாநில அரசுகள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் கொரோனா தொற்றை சுயமாக வீட்டிலேயே கண்டறிவதற்கான கருவி ஒன்றை புனேவை மையமாக கொண்டு செயல்படும் மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் லிட். நிறுவனம் தயாரித்து உள்ளது.
‘கோவிசெல்ப் கிட்’ எனப்படும் இந்த ரேப்பிட் ஆன்டிஜென் டெஸ்ட் (ஆர்.ஏ.டி.) கருவிக்கு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஒப்புதல் அளித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த கருவியை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம் எனவும், இதன் விலை சுமார் ரூ.450 எனவும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
மேலும், இந்த கருவியை பயன்படுத்தும் முறை குறித்தும் ஐ.சி.எம்.ஆர். சில வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. அதனை அடிப்படையாக கொண்டு கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களை பரிசோதனை செய்து பார்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கெளசல்யா அருண்