கொரோனாவில் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கிற்கு ரூபாய் 15 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திரா.
கொரோனாவின் கொடூரத்தால் பல்வேறுதரப்பினரும் பொருளாதாரத்தில் மிகவும் பின்னடைவைச் சந்தித்து உள்ளனர். இதன் காரணமாக கோரோனாவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய கூட முடியாமல் பல குடும்பங்கள் தவித்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு ரூபாய் 15 ஆயிரம் வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆந்திர மாநில அரசின் தலைமைச் செயலர் அனில் குமார் சிங்கால், ”ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் 2.07 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 9,271 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இறுதிச் சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம் அரசு சார்பில் வழங்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான ஒதுக்கப்பட்ட நிதியை இந்த செலவினங்களுக்குப் பயன்படுத்தலாம். மாநில சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை ஆணையர் இதற்குரிய நிதியை மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒதுக்கீடு செய்வார்” எனத் தெரிவித்துள்ளார்.
– கெளசல்யா அருண்