உயர்ந்த மனிதர்களை நாம்தான் எப்போதும் தேடிப் போகவேண்டும் என்பது இல்லை. சில நேரங்களில் உயர்ந்த மனிதர்கள் நம்மைத் தேடியும் வருவார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு மதிக்க நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
சில நேரங்களில் குணத்திலும் பண்பிலும் சிறியவர்கள் நமக்கு எட்டாத தொலைவில் இருப்பார்கள், அவர்களை நாமே போய் சந்திக்க வேண்டிய தேவை இருக்கும். இதை மட்டுமே வைத்து அந்த சிறியவர்களை நாம் பெரியவர்கள் என நம்பிவிடக் கூடாது.
எத்தனை நபர்களைத் தானே போய் பார்த்தாலும் பெரியவர்களுக்கு அதனால் இழிவும் கிடையாது, எத்தனை பேர் சிறியவர்களை வந்து சந்தித்தாலும் அதனால் சிறியவர்களுக்கு சிறப்பும் கிடையாது.
இதற்கு நமது வாழ்க்கையிலேயே ஒரு உதாரணம் இருக்கிறது. நமது வயிற்றுக்கு நன்மை செய்யும் பால், மோர், தயிர் எல்லாம் நமது தெருவுக்கு வந்து விற்கப்படுகின்ரன. அவையே நம்மை வந்தும் அடைகின்றன. இதனால் அவற்றின் பெருமை குறைந்துவிட்டதா?
கள்ளானது அது இருக்கும் இடத்திலேயே விலை போகிறது. அதனால் அது பெருமைதான் பெற்றுவிட்டதா? – ஒரு மேடையிலே வாரியார் சொன்னது.
- சுடரொளி