நமது நிருபர்
நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ’டாக்டர்’ திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் தேதியில் வெளியிடப்பட இருந்தநிலையில், தேர்தல் அறிவிப்பு காரணமாக அந்தப் படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டது.
இதனால் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றிருந்த கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாகவும், விரைவில் புதிய ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என்றும் டுவிட்டரில் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
அதன்படி இப்போது புதிய ரிலீஸ் தேதியை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி வரும் ரம்ஜான் தினத்தன்று டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கையில், ரம்ஜான் அன்று டாக்டர் வருண் மற்றும் குழுவினரை சந்திக்கத் தயாராகுங்கள் என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் படம் மெருகேற்றப்பட உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. அத்தோடு தேர்தல் அன்று கட்டாயம் வாக்களிக்கும்படியும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
டாக்டர் திரைப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவும் இந்த நேரத்தில், பட வெளியீட்டுக் குழுவின் இந்த அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்து உள்ளது.