நமது நிருபர்
பெரியாரை இழிவுபடுத்தியதாக எழுந்த சர்ச்சையில் விளக்கம் அளித்த திரைப்பட இயக்குநர் செல்வராகவன் மன்னிப்பும் கேட்டார்.
செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.
சைக்கோ மனநிலை உள்ள ஒரு மனிதனின் கதைதான் இந்த நெஞ்சம் மறப்பதில்லை. இந்தப் படம் தொடர்பான பேட்டி ஒன்றில், ‘படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் பெயர் ராம்சே என உள்ளது. அது ஈ.வே.ராமசாமியைக் குறிக்கவா?’ – என்ற பொருளில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு செல்வராகவன் ‘ஆமாம்!’ – என்றும் பதில் சொன்னார்.
இதனால் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் ‘ஒரு சைக்கோ கதாப்பாத்திரத்துக்குப் பெரியாரின் பெயரா?’ – என்று தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து டுவிட்டரில் விளக்கமளித்துள்ள செல்வராகவன் “நண்பர்களே! அந்த நேர்காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த பதிலை சமூகவலைத்தளங்களில் பகிர்பவர்கள், ’கதாப்பாத்திரத்துக்குப் பெயர் வைக்கும்போது கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்கிறாரா? அல்லது பேட்டி கொடுக்கும் போது கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்கிறாரா?’ – என்று மீண்டும் குட்டையைக் குழப்பி வருகின்றனர்.
#செல்வராகவன் #நெஞ்சம்மறப்பதில்லை #மன்னிப்பு