நமது நிருபர்
பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கிற்கு நடக்க இருந்த விவாகரத்து கொரோனாவால் தடுக்கப்பட்டு உள்ள செய்தி வெளியாகி உள்ளது.
இந்தித் திரைப்பட உலகின் பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக். கமல்ஹாசனின் ஹே ராம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் இவர் தலைகாட்டி இருந்தாலும், சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம்தான் தமிழ் ரசிகர்களுக்கு இவரை அறிமுகப்படுத்தியது.
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆல்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட சித்திக்கிற்கு 2 குழந்தைகளும் உள்ளனர். சில மாதங்கள் முன்னர் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி ஆல்யா நவாசுதீன் சித்திக்கிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இந்த செய்தி பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விவாகரத்து முடிவைக் கைவிடுவதாக ஆல்யா அறிவித்து உள்ளார். இதன் பின்னணியில் கொரோனா ஒரு காரணமாக உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். இது தற்போது பாலிவுட்டில் மகிழ்ச்சியோடு பகிரப்படும் செய்தியாக மாறி இருக்கின்றது.
சில வாரங்களுக்கு முன்பு ஆல்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், அப்போது குழந்தைகளையும் தன்னையும் நவாசுதீன் சித்திக் நன்றாகப் பார்த்துக் கொண்டதாகவும், அன்பான கணவனாகவும் தந்தையாகவும் அவரது மறுமுகத்தை அப்போது பார்த்ததால், விவாகரத்து முடிவைக் கைவிட்டுவிட்டதாகவும் ஆல்யா கூறி உள்ளார்.
இந்த சம்பவம் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் மறு பக்கத்தை மட்டுமல்ல கொரோனாவின் மறு பக்கத்தையும் காட்டுவதாக சமூக வளைத்தளங்களில் இதனைப் பகிர்பவர்கள் கூறுகிறார்கள்.