நர்மதை நதியும், சாத்திரக் குப்பையும்
ஏராளமான கற்பனையில் ஓடி வந்த எனக்கு எந்த ஏமாற்றத்தையும் தராமல் பிரம்மாண்டமான உருவத்தால் விருந்தளித்தது நருமதை.
நன்றாக விடிந்திருந்தது. மக்கள் வரத் தொடங்கி இருந்தார்கள். குளிப்பவர்களை பார்க்க முடிந்தது. அவர்களையும் பார்க்க முடிந்தது.
சிலர் குளித்தார்கள். சிலர் துவைத்தார்கள் சிலர் சாஸ்திரங்களின் பெயரால் உள்ளே அசுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஓரமாக நடக்கத் தொடங்கினேன். தூரத்திலிருந்து பார்ப்பதற்கு எல்லாமும் அழகுதான் நெருங்கினால் தான் தெரியும் சகதியும் சாணியும் என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பதை இன்றும் அறிந்தேன். கால்வைத்த இடமெல்லாம் சகதியில் வழுக்கியது.
சொன்னால் நம்ப முடிகிறதா என்று தெரியவில்லை. அவ்வளவு வழவழப்பு. காரணம் வேறொன்றுமில்லை.
அருகில் இருக்கும் அத்தனை கோயில்களிலும் இருந்தும் வரும் அபிஷேக நீர், விளக்குகளின் எண்ணெய் கசிவு என்பதை அந்த மண்ணின் வாசனையிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது.
என்ன செய்ய? வணக்கத்துக்குள்ளும் இருள் இருக்கிறதே…!
பெரும் புராதான சிறப்பு மிக்க நர்மதை ஆற்றுக்கு வரும் மீன்பிடிப்பவர்களையும் பார்த்தேன். அருகே ஒரு குட்டி வாத்து கூட்டம் எதையும் கவனிக்காமல் தன் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தது.
தொடர்ந்து நடந்து போனேன். வலதுபக்கம் கோயில். இடது பக்கம் நர்மதா. நடுவே, எவ்வளவு தூரம் நடந்து இருப்பேன் என்று தெரியவில்லை. சுமார் இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர்கள் இருக்கலாம். திரும்பிப் பார்க்கும்போது நான் இறங்கிய முனையம் மறைந்திருந்தது. சரி அதுவும் நல்லதுக்குத்தான். அங்கேயே அமரலாம் என்று அமர்ந்தேன்.
மழை லேசானது முதல் மிதமானது வரை பொழிந்து கொண்டிருந்தது நனைந்தபடியே இத்தனையும் செய்தேன். மழை கொஞ்சம் வலுத்தபோது தான் மழையையே கவனித்தேன்.
அதுவரை அமைதியாக நின்றீருந்த யாரோ ஒருவர் அவசர அவசரமாக தன்னிடமிருந்த எதையோ எடுத்து ஆற்றுக்குள் ஊற்றினார். ஊற்றிவிட்டு கும்பிட்டார். புரிந்தது இது சம்பிரதாய குப்பை என்று.
நேரம் போகப்போக பாவங்களை கழுவுவோர் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்த்து. ஒரு 12 மணியளவில் மீண்டும் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். இப்போதுதான் புரிந்தது நாம் வெகுதூரம் வந்திருக்கிறோம் என்பது. எவ்வளவு தூரம் தெரியுமா? கரையை (செத்தானிகாட்) அடைந்த போது மணி 1.20
இங்கிருந்து மீண்டும் ஏன் ஆட்டோவில் போக வேண்டும். வந்த பாதையை தான் கவனித்தோமே. நடந்தே ரயில்நிலையம் போகலாம் என்று முடிவு செய்தேன்.
பக்தியா? மரியாதையா?
நடக்க தொடங்கினேன். சிறியதும் பெரியதுமாய் எல்லா இடங்களிலும் ஆலயங்கள். ஆனால் இவர்களுக்கு கடவுள் மேல் ஒரு பற்று இருக்கிறதே ஒழிய பக்தி இல்லவே இல்லை. வீடு மேல்தளத்தில் என்றால் கோயில் கீழ்தளத்தில். கோயிலுக்குள்ளே குடும்பமே பேசி சிரித்து விளையாடுகிறது. சரி கடவுளோடு இயைந்த வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று பொருள்கொள்ளலாம்.
ஆனால், உயர்ந்த கோயிலின் இன்னொரு புறம் சிலைகளுக்கு அருகில் மலம் கழித்திருப்பதை என்னவென்று சொல்வது. (இத்தனைக்கும் மேல்தளக்கோயிலில் இருந்து இறங்கி வந்து கோயில் சுவற்றிலேயே சிறுநீர் கழித்து விட்டு மீண்டும் கோயிலுக்கு ஓடும் பக்தியை என்ன சொல்லி சமாளிப்பது என்றே தெரியவில்லை. )
வேண்டுமானால் இப்படி சொல்லலாம். இவர்களது கடவுள் பக்தி என்னவாக இருக்கிறதோ இருக்கட்டும். ஆனால், மதிக்கும் பொருள் மீது மரியாதை வைக்கும் பழக்கம் இல்லயோ என்னவோ. பக்தி முறை மாறலாம். மரியாதை எங்கும் மரியாதைதானே.
அந்தக்கரையில் இருக்கும் மரச்செறிவு, இந்தக்கரையில் துளியும் இல்லை. ஏனோ அது எனக்கு குறையாகவே இருந்தது.
யோசித்துப்பாருங்கள், பெரும் நதி. அதன் கரையில் ஒரு பெருமரம். அதற்கடியில் அமர்ந்திருந்தால் அந்த சுகமே வேறு.ஆனால், இங்கு அப்படி ஒன்றுக்கு வாய்ப்பே இல்லை.
நிச்சயம் அவை இந்த கட்டுமானங்களுக்காக அழிக்கப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்தபோது, இங்கிருக்கும் தெய்வச்சிலைகள் பரிதாபமாகத் தெரிந்தன. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நர்மதையின் சேத்தானிகாட் பகுதியில், அக்கரைக்கு இக்கரை பச்சை கிடையாது.
யோசித்துக்கொண்டே கடைத்தெரு வழியே வந்தேன். அங்கு ஒரு சிலை இருந்தது. ஒரு நாற்சந்தியில், அதுவும் மாவட்ட தலைநகரில், ரயில்வே நிலையம் பேருந்து நிலையம் இரண்டும் இருக்கும் இடத்தில், நட்ட நடுவே இருக்கிறதென்றால் முக்கியமான நபரின் சிலையாக இருக்கலாம் என்று நினைத்தேன்.
யார் என்று கேட்க நினைத்தேன். ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள். அதிமுக தலைமை அலுவலகத்தில் நின்று கொண்டு, எம்.ஜி.ஆர் சிலையைப் பார்த்து யார் இவர் என்று கேட்பவனை நாம் எப்படி பார்ப்போம்.
அப்படி ஏதும் தவறு செய்து விடக் கூடாது என்று தோன்றியது. இருந்தாலும் குழப்பம் வந்தபிறகு தெரியாமல் போனால் நன்றாகவா இருக்கும்..
கேட்டேன். ஓஹ் கோன் ஹே…
அவர்கள் திகைத்தார்கள்.. ஒருவேளை நான் கேட்டது தவறா என்று நானும் திகைத்தேன். பிறகு சுவாதீனத்துக்கு வந்தேன்.
தேக்..ஓஹ் மூர்த்தி க்கா நாம் க்யா..
அவர்கள் வாழைப்பழம் விற்பவர்கள். அருகில் இருக்கும் பாத்திரக்காரரிடம் கேட்டனர். அவருக்கும் தெரியவில்லை.
எளிய மக்களுக்கு தெரியாத எந்த தலைவனும் சிலையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் பயனும் இல்லை.
அது அவர் பிறந்த , இறந்த நாளில் மட்டும் நினைவுக்கு வந்தால் போதும் என்று நினைத்தபடி நன்றி சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
வரும்போது ரயிலில் தானே வந்தோம். இப்போது பேருந்தில் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். வழி கேட்க வேண்டும். “இங்கு இட்டார்சிக்கு பஸ் வருமா?” என்று..
கூகுளிடம் கேட்டேன். அப்படியே அங்கிருந்த மாட்டு வண்டிக்காரரிடம் கேட்டேன். “பஸ் இஸ்டாண்ட் கே ஜல்” என்றார். கூடவே ஒரு வேலையும் கொடுத்தார். அவர் தூக்க வேண்டிய முள்ளங்கி மூட்டையை தூக்கி விட சொன்னார்.
அவர் கேட்டது புரியவில்லை. ஆனால் சூழல் அதுதான். போய் தூக்கி விட்டேன். மழை பெய்திருந்ததால் மூட்டையிலிருந்த காய்கறியின் வேரிலிருந்த மண் சகதியாகியிருந்தது. கையில் சகதி ஒட்டியது. நான் கேட்காமலே ஒரு ஓட்டல்காரர் இங்கு வந்து கழுவிக் கொள் என்றார்.
எதிர்பாராத இடத்தில், நேரத்தில் கிடைக்கும் சிறிய ஆதரவும் பெரு நம்பிக்கையை தருகிறது. ‘மனிதன் எப்படி பார்த்தாலும் மனிதன் தான்’ என்று ராபர்ட் பர்ன்ஸ் சொன்னது இதைத்தான் போலும்.
பஸ் ஏறினேன். ரயில் காட்டிய காட்டு வேளாண்மை போல் அல்லாமல், பேருந்து பாதை நல்ல நாட்டு வேளாண்மையை காட்டியது. மதிய உணவுக்குள் ஜோஜு அண்ணன் பணிபுரியும் ஜீவோதயா தொண்டு நிறுவனத்தின் சிறார் விடுதிக்கு செல்ல வேண்டும்.
1 comment
நானும் கூட பின் தொடர்ந்தபடியாய்…..