”மரணத்துக்கு முந்தைய அமைதி!” மரணத்தின் விலை – தொடர். அத்தியாயம் 1.

SHARE

மகாபலிபுரம், ஒரு மாலை நேரம்…

பேரிரைச்சலோடு அலைகள் எழுவதும் விழுவதுமாக இருந்தன…

கடல் நீரில் குடும்பம் சகிதமாக குளியல் போடும் ஒரு கூட்டம்…

அலைகளில் கால்களை மட்டும் நனைத்தால் போதும் என்றொரு கூட்டம்.. கடற்கரையில் இருந்து அலைகளை ரசித்தால் மட்டுமே போதும் என மற்றொரு கூட்டம்… எத்தனைவிதமான மனிதர்கள்…!

கடற்கரை மணலைக் கோதியபடி அந்த காட்சிகளைக் கண்டு கொண்டிருந்தான் புகழேந்தி.

ஒரு தம்பதி அவர்களின் குழந்தையுடன் கடலலையில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த தம்பதிகளைப் பார்த்தான்.. அவர்கள் குடும்பத்துடன் விளையாடும் அந்த காட்சியை கண்டு அவனது கண்களில் கண்ணீர் சுரந்தது.

கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

பெருமூச்சு விட்டபடி கடற்கரை மணலில் நடக்க ஆரம்பித்தான்.

கடற்கரைக்கு வெளியில் வந்து ஒரு பெட்டிக்கடையில் நின்று சிகரெட் வாங்கி பற்ற வைத்தான்.

அவனது மனது மிகுந்த குழப்பத்தில் இருக்கிறது என்பதை அவனைப் பார்க்கும் யாரும் சொல்லி விடுவார்கள்.

சிகரெட்டின் புகை நுரையீரலை முழுமையாக ஆக்கிரமித்த பின் வெளியேறியது.

கண்களை மூடினான்… மூடிய இமைகளில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

மருத்துவனையில் நடந்தவைகள் மீண்டும் அவனுக்கு ஞாபகம் வந்தன.

மருத்துவனை, மருத்துவரின் அறை…

” வாங்க புகழேந்தி.. உட்காருங்க..!” என்ற மருத்துவருக்கு வயது ஏறக்குறைய 56 இருக்கலாம். அவரது அனுபவம் அவரது குரலில் வெளிப்பட்டது.

கொஞ்சம் குழப்பத்துடனும், மெல்லிய புன்னகையோடும் அவருக்கு எதிரில் அமர்ந்தான் புகழேந்தி.

மருத்துவரோ, ‘27 வயதான இளைஞன், பார்ப்பதற்கு நல்ல களையான முகவெட்டு, உதட்டில் எப்போதும் புன்னகை, இன்னும் திருமணமாகாத இவனுக்கா இப்படி நடக்க வேண்டும்?’ என்று புகழேந்தியையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

மருத்துவர் எதற்காக இப்படி தன்னை இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறார் என புரியாமல் மிரண்ட விழிகளோடும் குழம்பிய மனதுடனும் அவருக்கு முன் அமர்ந்திருந்த புகழேந்தி, அந்த அறை முழுவதும் நிலவிய அமைதியை கலைத்தான்.

“டாக்டர் என்னாச்சு..? என் ரிப்போர்ட்ல என்ன இருக்கு டாக்டர்..? ஏன் அமைதியா இருக்கீங்க..? ” என்று அமைதியான குரலில் கேட்கத் தொடங்கினான்.

” உங்க அம்மா, அப்பா , ரிலேட்டிவ் யாராவது வந்துருக்காங்களா புகழ்..?”

” இல்ல டாக்டர்.. எனக்கு யாரும் இல்ல..!”

” புரியலை .. யாரும் இல்லைன்னா..? “

” இல்ல டாக்டர் நான் படிச்சது வளர்ந்தது எல்லாமே அனாதை ஆசிரமத்துலதான்.. எனக்குன்னு யாரும் இல்ல டாக்டர்..”

மீண்டும் ஒரு மயான அமைதி..

” இப்ப எங்க ஒர்க் பண்றீங்க.. ?”

” டெக் சாஃப்ட் னு ஒரு ஐடி கம்பெனியில ஒர்க் பண்றேன் டாக்டர்..’’

“நண்பர்கள் யாராவது பக்கத்துல இருக்காங்களா?”

”இல்லை டாக்டர்…”

“ஓ.. ஒகே.. ஒகே.. அப்ப எதுவா இருந்தாலும் உங்க கிட்டதான் சொல்லியாகணும்… சரி நேரா விஷயத்துக்கு வர்றேன்.. நீங்க இங்க வரும்போது சாதாரண பேக் பெய்ன் இருக்கிறதா சொன்னீங்க.. உங்களுக்கு இந்த வலி எத்தனை வருஷமா இருக்குது.. ? “

” நான் காலேஜ் படிக்கிறப்போ ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆச்சு… அப்போது இருந்து வலி இருக்கு. நடுவுல கொஞ்சம் குறைஞ்சு இருந்தது.. இப்ப ஒரு மாசமாதான் ரொம்ப இருக்குது டாக்டர்..”

” அந்த ஆக்சிடென்ட்ல நீங்க சரியான ட்ரீட்மெண்ட் எடுத்திருந்தா… பிரச்சனை இவ்ளோ தூரத்துக்கு வந்துருக்காது…”

” டாக்டர் .. என்ன பிரச்சனை..? நீங்க எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லுங்க… ப்ளீஸ்..”

” அதாவது புகழ்.. உங்க பேக் போன்ல ஏற்பட்ட அந்த அடினாலதான்… எப்படி சொல்றது… ஓகே நேரடியா சொல்லிடுறேன் உங்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட்டிருக்கு…”

“டா…க்..ட..ர்… ” என்று புகழேந்தி கத்தியதில் அந்த அறையே அதிர்ந்தது.

” கொஞ்சம் பொறுமையா கேளுங்க புகழேந்தி.. அந்த விபத்து நடந்த போதே நீங்க சரியான சிகிச்சை எடுத்துருக்கணும்… அதை நீங்க செய்யல… வலி இல்லைனு நீங்க சாதாரணமா… அஜாக்ரதையா இருந்ததால தான் இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்ருக்கு.. இந்தாங்க உங்களோட ரிப்போர்ட் “

” டாக்டர்.. இதுக்கு ட்ரீட்மெண்ட் எதுவும் இருக்கா..” கண்ணீருடன் கேட்ட புகழேந்தியை பரிதாபமாக பார்த்த மருத்துவர்.

” சாரி புகழ்.. அந்த ஸ்டேஜை நீங்க எப்பவோ கடந்துட்டிங்க.. இதுக்கப்பறம் தாம்பத்தியம் உங்களுக்கு சாத்தியம் இல்ல.. லிஸ்ட்ல இருக்குற மாத்திரைகளை விடாம எடுத்துக்கங்க.. அந்த வலி கொஞ்சம் குறையும்.. ” என சோகத்தோடு சொல்லி முடித்தார்.

ஒரு ஆணின் வேதனை இன்னொரு ஆணிற்குத் தான் தெரியும்…

கடற்காற்றில் சிகரெட் கரைந்து கைகளை சுட்டது.

சுதாரித்துக் கொண்டு சிகரெட்டை கீழே போட்டான்.

இன்னொரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்து மறுபடியும் புகையை உள்ளிழுத்து வெளியேற்றினான்.

புகழேந்தியையும், அவன் செய்யும் செயலையும் வினோதமாக பார்த்துக் கொண்டிருந்தான் கடைக்கார இளைஞன் .

தற்கொலை செய்து கொள்ளப் போகிறவன் எத்தனை சிகரெட் அடித்தாலென்ன.. குடியா முழுகிவிடப் போகிறது!.

– தொடரும்…

எழுத்து: ர.ஆனந்தன்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கிராமத்துக்காரி – இது 90களின் உலகம் – பகுதி 3: வேலு தாத்தா

Admin

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 10

Pamban Mu Prasanth

பிக் பாஸ் நாட்கள். நாள் 25. ‘அடக்கம்… அடக்கம்… அடக்கமோ அடக்கம்!’

சே.கஸ்தூரிபாய்

பிக் பாஸ் நாட்கள். நாள் 24 ‘நானும் தலைவர்தான்..!’

சே.கஸ்தூரிபாய்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 6 கமலின் ஆன்லைன் கிளாஸ்…

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள் 12: ‘எல்லாம் நாடகம்!’

இரா.மன்னர் மன்னன்

முதல் வெப் தொடரைத் தயாரிக்கும் ஏவி.எம்: வெளியானது அறிவிப்பு

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் – 19. “காசைத் திருடினாலும் சலுகை!”

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

சிற்ப இலக்கணம். பகுதி 4. தொழிற் கை முத்திரையின் வகைகள் (5 – 8)

மகசூல் – பயணத்தொடர் – பகுதி 7

Admin

பிக் பாஸ் நாட்கள். நாள் – 20. “பல்லைப் பிடுங்கிய கமல்”

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment