கொரோனாவில் இருந்து மீண்ட இஸ்ரேலில் கூட்ட நெரிசலால் பெரும் விபத்து ஏற்பட்டு உள்ளது.
மெரோன், இஸ்ரேல்
இஸ்ரேல் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மெரோன் நகரில் வருடம் தோறும் நடைபெறும் யூத மத விழாக்களில் ஒன்றான லாகோம்-போமர் விழா இந்த ஆண்டும் நடைபெற்றது.
இந்தத் திருவிழாவின் கொண்டாட்டங்களில் யூத மக்கள் கையில் தீப்பந்தத்தை ஏந்தி பங்கேற்பார்கள். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இத்திருவிழா ரத்து செய்யப்பட்டது. இம்முறை பெரும்பாலாக மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்ட நிலையில் இஸ்ரேலில் கொரோனா பெருமளவு குறைந்து விட்டதால் மெரோன் நகரில் இந்த பாரம்பரிய திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
முக்கியமான விழா என்பதால் இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி முச்சுத் திணறி 44 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளனர்.
மக்கள் அமர்ந்திருந்த ஸ்டேடியத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததால் பதற்றம் அடைந்து மக்கள் ஓடியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், அங்கு வழக்கத்தை விட மூன்று மடங்கு மக்கள் அதிகமாக இருந்ததாகவும் இஸ்ரேலில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இஸ்ரேலிய ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு இந்த சம்பவத்தை ஒரு ‘பெரிய பேரழிவு’ என்று வர்ணித்து, உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
- பிரியாவேலு