சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்றும் திரைப்படம் ஐ.எம்.டி.பி. ரேட்டிங்கில் உலக அளவில் அதிக ரேட்டிங் பெற்ற மூன்றாவது திரைப்படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
ஐ.எம்.டி.பி. என்பது உலக அளவிலான திரைப்படங்களின் தகவல் மற்றும் மதிப்பீட்டு இணையதளம் ஆகும். இதில் உலக திரைப்பட வரலாற்றில் இதுவரை வெளியான படங்களில் ரசிகர்களிடம் அதிக மதிப்பீடு பெற்ற, உலகின் தலைசிறந்த 1000 படங்களின் பட்டியலில் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மூன்றாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
முதல் இடத்தை 10க்கு 9.3 புள்ளிகளோடு ஷஷாங் ரிடம்ஷன் படமும், இரண்டாம் இடத்தை 9.2 புள்ளிகளோடு காட்பாதர் படமும் பிடித்துள்ளன. சூரரைப் போற்று திரைப்படம் பெற்ற புள்ளிகள் 9.1 ஆகும்!.
ஒரு தமிழ்த் திரைப்படம் உலக அளவில் அதிக ரேட்டிங் (rated) பெற்ற மூன்றாவது திரைப்படமாக இடம் பெற்றுள்ளது இந்திய சினிமாவிற்கே பெரும் சேர்க்கும் விதமாக உள்ளது என திரைப்பட துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்த திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது. ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா வருகிற ஜூன் 11 ஆம் தேதி துவங்கி 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் கொரோனா பரவல் காலம் என்பதால் ஷாங்காய் திரைப்பட விழா கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது.
- கெளசல்யா அருண்