எங்கே செல்லும் இந்தப் பாதை? – அக்னிபாத் கிளப்பும் கேள்விகள்…

SHARE

Valhalla VintageVerb VST Crack

 ‘வட இந்திய இளைஞர்களைப் பார்த்து நாடே பெருமைப்படுகிறது’என்று சிலகாலம் முன்பு சொன்னார் பிரதமர் மோடி. இன்று அதே  வட இந்திய இளைஞர்களால் 10க்கும் மேற்பட்ட ரயில்கள் எரிக்கப்பட்டு உள்ளன. 300க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. நாடெங்கும் வன்முறையின் அலை வீசுகின்றது, இதன் பின்னாக உள்ளது அக்னிப்பாதை (இந்தியில் அக்னிபாத்) – என்ற திட்டம். இளைஞர்களின் கொந்தளிப்புக்குக் காரணம் என்ன?. தொடர் வன்முறைகளுக்குத் தீர்வு என்ன? – வாருங்கள் பார்ப்போம்.

முப்படைகளில் 4 ஆண்டு கால தற்காலிக சேவை என்ற திட்டம் என்று அக்னிபாத்தை சுருக்கமாகக் கூறலாம். அதாவது 4 ஆண்டுகளுக்கு இராணுவத்தில் வேலை இருக்கும். பின்னர் 75% பேர் இராணுவத்தில் இருந்து வெளியே அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு ஒரு தொகை மட்டும் கொடுக்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்ட நீண்ட காலப் பலன்கள் இருக்காது.

 இந்தப் புதிய திட்டத்திற்கான விதை எங்கே போடப்பட்டது என்று பார்த்தால்இராணுவ செலவு குறைப்புஎன்ற தாய்க்கு பிறந்த சேய் தான் அக்னிபாத் திட்டம். அதாவது இராணுவ வீரர்களுக்கு அரசு செய்யும் செலவைக் குறைக்கவே இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. அப்படி என்ன செலவு என்று பார்த்தால், பட்ஜெட்டில் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு 5,25,166 லட்சம் கோடியாக உள்ளது. அதில் ஓய்வூதியத்துக்காக மட்டும் ரூ. 1,19,696 லட்சம் கோடியை இராணுவம் செலவழிக்கிறது. அதாவது நான்கில் ஒரு பகுதி ஓய்வூதியத்துக்காக செலவிடப்படுகிறது. மேலும் வீரர்களின் ஊதியம் மற்றும் பராமரிப்பு செலவுக்காக 2,33,000 கோடி ஒதுக்கப்படுகிறது. மீதத் தொகையைக் கொண்டே இராணுவத் தளவாடங்கள் வாங்க வேண்டியுள்ளது. இதனால் இராணுவ வீரர்கள் மீதான அரசின் பொறுப்பைக் குறைக்கவே அக்னிபாத் திட்டம் முற்படுகிறது.

பொருளாதார அடிப்படையில் சரியாகத் தெரியும் இந்தத் திட்டம் சமூக அடிப்படையில் சரியானதாக இல்லை. நாட்டுக்காக தனது உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ள நாட்டின் பிள்ளைகள்தான் இராணுவ வீரர்கள். மலையிலும், பாலைவனத்திலும், பனிப் பாறைகளிலும் இவர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களின் எதிர்காலத்தை அரசு உறுதி செய்யாது என்றால் அது பிள்ளையைப் பெற்றோர் கைவிடுவதற்கு இணையானது. ‘எல்லையில் இராணுவ வீரர்கள்…’ – என்று சாமானிய மக்களிடம் கூட இராணுவ வீரர்களை எடுத்துக் காட்டாகக் கூறும் ஒரு அரசு இதைச் செய்யக் கூடாது.

அக்னிபாத் திட்டத்தின் கண்கவர் அம்சங்களாக தற்காலிக இராணுவ வீரர்களுக்கு வழங்குகின்ற ஊதியத்தையும் பயிற்சி நிறைவின் போது கொடுக்கிற தொகையும் பாராட்டுக்குரியவையாக அரசு முன்னிறுத்தினாலும் அவை போதுமானவை அல்ல.

இந்திய இராணுவத்தில் பயிற்சியும், பணி அனுபவமும் பெற்ற 75% வீரர்களை நாம் பின்னர் எங்கே பயன்படுத்தப் போகிறோம்? – என்ற கேள்விக்கு அரசிடம் விடை இல்லை. இன்றைய நிலையில் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கு பெரும்பாலும் காவலாளி வேலைகள்தான் கிடைக்கின்றன. அந்த வேலை ஓய்வூதியம் பெறும், வயது கடந்த முன்னாள் வீரர்களுக்கு எதற்காவது பயன்படலாம்.

ஆனால் 22-23 வயதில் இளமையுடனும், இரத்த துடிப்புடனும் இந்திய இராணுவ பயிற்சியுடனும் வெளிவருகிற இளைஞர்கள் ஓய்வூதியம் இல்லாமல், சரியான வேலையும் இல்லாமல் எங்கு போவார்கள்?. யானைக்கு போர்பயிற்சி கொடுத்து கோவில் தெருக்களில் கையேந்த விடப் போகிறோமா? – அரசு சிந்திக்க வேண்டும்.

ஒரு காலகட்டத்தில் பொறியாளர்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இன்றைய காலகட்டத்தில் இல்லை. காரணம், பொறியாளர்களை அதிகம் உருவாக்க தெரிந்த நமக்கு அவர்களுக்கான சரியான வேலைவாய்ப்பை உருவாக்கத் தெரியவில்லை. அது போல உடற்பயிற்சியில் தன்னை முழுமையாக அர்பணித்து, மாநில, தேசிய அளவில் தன்னை ஆணழகன் என்று நிரூபித்தவர்களில் பல பலசாலிகளை நாம் இன்றுபார்களில் பாதுகாவலர் பணியில் நிறுத்தியிருக்கிறோம். காரணம் இவர்களின் திறமைகளைப் பயன்படுத்த அரசு முன்வரவில்லை, சமூகத்திற்கு அந்த அறிவு இல்லை. அதே நிலை நாளை இராணுவ வீரர்களுக்கும் வரலாம்.

மேலும், இவர்களிடம் பட்டப்படிப்பு இல்லை, திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில்  இவர்கள் படிக்கலாம், என்றாலும் அதை எத்தனை பேர் சாத்தியமாக்கி சாதனை படைக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. 17-18 வயதில் மேற்படிப்பை தொடரவேண்டும் என்று நினைக்கிற இளைஞர்கள் பலர் குடும்ப சூழலின் காரணமாக அக்னிபாத் திட்டத்திற்குச் செல்ல நேரிடலாம். அப்போது இவர்களின் வளர்ச்சி பாதிக்கும். ஏனெனில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் அதிகாரி பணிகளுக்கு பட்டப்படிப்பு தேவைப்படும், எனவே இவர்கள் பட்டம் பெற்று மீண்டும் இந்த பணியிடங்களுக்கு வரும் வரை காலம் காத்திருக்காது, பெரும்பாலும் அடிப்படை பணிகளில் மட்டுமே இவர்களால் பணிபுரிய முடியும். பாஜகவினரே அக்னிபாத் திட்டத்தில் இருந்து திரும்பும் வீரர்களுக்கு தங்கள் அலுவலகங்களில் பாதுகாவலர் வேலை கிடைக்கும் என்று பேசி வருவது ஒரு உதாரணம். அது போல இராணுவத்திற்குச் சென்று திரும்பும் பெண்கள் அரசு கொடுத்த பணத்தைக் கொண்டு திருமணம் செய்யவே வாய்ப்புகள் இருக்கும், அவர்களின் எதிர்காலத்திற்கும் அதிக வாய்ப்புகள் இருக்காது. பஞ்சாலைகளின் சுமங்கலித் திட்டம் போன்ற ஒரு திட்டமாகவே இதுவும் மாறும்.

ஒருபக்கம்  இப்படிப் பல வகைகளிலும் அக்னிபாத் திட்டம் இளைஞர்களில் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க, மறுபக்கத்தில் உரிய வேலை இல்லாத, இராணுவப் பயிற்சி பெற்ற இளைஞர் கூட்டத்தை சமுதாயம் எப்படி எதிர்கொள்ளும்? – என்ற கேள்வியும் எழுகின்றது. சமூக விரோத அமைப்புகள் இந்த இளைஞர்களை கைக்குள் போட்டுக் கொண்டால் அப்போது சமூகத்திற்கு எதிரான இராணுவமே உருவாகிவிடும், அதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளூர் காவல்துறைகளுக்கு இருக்காது. அது நாட்டுக்கு நல்லது அல்ல.

சீனாவில் மாவோ கலாசாரப் புரட்சி – என்ற ஒன்றை இளைஞர்களைக் கொண்டு தொடங்கினார். அதனைப் பின்னர் கட்டுப்படுத்த முடியவில்லை, நாடெங்கும் வன்முறை பெருக, இறுதியில் இராணுவம் கொண்டுதான் கலாசாரப் புரட்சி ஒடுக்கப்பட்டது. அக்னிபாத் அந்த நிலையை நோக்கி நாட்டைச் செலுத்தும் அபாயம் உள்ளது.

எந்தப் பயிற்சியும் இல்லாத இளைஞர்கள் இதோ இரயில்களைக் கொளுத்துகின்றனர், அவர்களைக் கட்டுப்படுத்த அரசால் இயலவில்லை. இவர்களுக்கு ஆயுதப் பயிற்சியைக் கொடுத்து இதே இடத்தில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் நிறுத்தினால் என்ன ஆகும்? – என்பது பெரும் அச்சத்தைக் கொடுக்கின்றது.

இளைஞர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. இராணுவம் ஒன்றும் மடம் அல்ல. விவசாயச் சட்டங்கள் விவகாரத்தில் மிகத் தாமதமாகப் பாடம் கற்ற அரசு அக்னிபாத் விவகாரத்தில் உண்மையை விரைந்து உணர்ந்தால் அது நாட்டுக்கு நல்லது.

– ரம்யா அசோக்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

கோவாக்சினை விட கோவிஷீல்டு தடுப்பூசியில் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்

Admin

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

தாத்தா பிறந்தநாளில் இறந்த பேரன்… சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பேரன் காலமானார்

Admin

உலகின் மிகச் சுவையான மாம்பழ வகை எது?

டெல்டா பிளஸ் வைரஸ்… தமிழக அரசுக்கு மத்தியஅரசு கடிதம்

Admin

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

ஏன்யா கருப்பு பூஞ்சை மஞ்சள் பூஞ்சை என பீதிய கிளப்புறீங்க..? கொந்தளித்த தெலங்கானா முதல்வர்

Admin

எங்கள் திட்டத்தில் தமிழக கிராமங்கள் கிடையாது: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

Admin

இந்த கொரோனா காலத்திலும் அதிகார வெறியா? பாஜக மீது சீறும் உத்தவ் தாக்ரே

Admin

தேர்தல் பத்திரங்கள் : திமுக பொய்களும் பாஜக பொய்களும்

Admin

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

Leave a Comment