ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறியுள்ளதால் அங்கு தாலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதால் 20 ஆண்டுகளாக அடங்கி இருந்த தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர்.
இதனால் அங்கு உயிர்வாழ அச்சப்பட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைய தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்த நிலையில் அங்கு ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அமெரிக்க இராணுவத்தினர், தாலிபான்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவும் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை தாக்க விமான நிலையம் அருகே உள்ள கட்டடம் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றநிலை நிலவி வருகிறது.
இதனிடையே ஆப்கானில் இருந்து அமெரிக்கப்படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேற்றப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 20 ஆண்டுகளாக அங்கிருந்த அமெரிக்க வீரர்களின் கடைசி அணி ஆப்கானை விட்டு வெளியேறியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், கடைசி அமெரிக்க வீரராக மேஜர் ஜெனரல் கிறிஸ் டோனாஹியூ நேற்று சி-17 ரக விமானம் ஒன்றில் புறப்பட்டதாக தெரிவித்து, அவர் ஆயுதங்களுடன், ராணுவ சீருடை அணிந்து வெளியேறும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தது.
இதனையடுத்து தாலிபான்கள் அமெரிக்கப் படைகளை நாட்டை விட்டு சென்றதை ‘வரலாற்று தருணம்’ என்று பாராட்டி, நாடு இப்போது ‘முழு சுதந்திரம்’ அடைந்துள்ளதாக கொண்டாடி வருகின்றனர்.