ஐபிஎல் தொடரின் நேற்றைய 2ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. இதுவரை நடந்த 8 போட்டிகளில், டெல்லி அணி 2 தோல்விகள், 6 வெற்றி என்று பெற்று 12 புள்ளிகளோடு முதல் இடத்தில் உள்ளது. நான், நீ என்று சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி அணிகள் மோதிக் கொண்டிருக்கையில் சத்தம் இல்லாமல் முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளது டெல்லி கேபிடல்ஸ்.
அகமதாபாத்
பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுலுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மயங்க் அகர்வால் புது கேப்டனாக இந்த போட்டியில் களம் இறங்கினார். டாஸ் வென்ற டெல்லி, அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் பீல்டிங்கைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறியது. பஞ்சாப் அணி, பூரணுக்கு மாற்றாக மலானுடன் களம் இறங்குவதாக கூறியது. இருந்தாலும் பஞ்சாப் அணியில் கேஎல்ராகுல் இல்லாமல் ஆட்டத்தை பார்க்க ரசிகர்களுக்கு சற்று கடினமாகவே இருந்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர் ப்ரப்சிம்ரன் மற்றும் மயங்க் அகர்வால். இஷாந்தின் முதல் ஓவரே மெய்டன் ஓவர் ஆனது. 6 பந்தும் டாட் பால்கள் ஆகின, இப்படியாக ஆரம்பம் முதலே தடுமாறியது பஞ்சாப். 4ஆவது ஓவரில் ரபாடாவின் பந்து வீச்சில், ப்ரப்சிம்ரனின் கவர் ஏரியாவில் தூக்கி அடித்த பந்து, ஸ்மித்தின் கையில் சென்று கேட்ச் ஆனது. புது கேப்டன் அகர்வால், ஆரம்பிக்கவே இல்லையே என்று யோசித்து கொண்டிருக்க, கெயில் வந்தார் ஆட்டத்திற்கு. இவர் போதுமே என்று சந்தோஷப்பட்டு முடிப்பதற்குள் 1 பவுண்டரி 1 சிக்ஸர் என அடித்த கெயில், ரபாடாவின் ஃபுல் டாஸ் பந்தில், அவுட் சைடு எட்ஜில் பட்டு போல்ட் ஆனார். இப்படியாக பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.
அடுத்து மலானுடன் கைக்கோர்த்தார் மயங்க். மலானும் 1 பவுண்டரி 1 சிக்ஸர் என 26 பந்துகளுக்கு 26 ரன்கள் எடுத்து அக்ஷரின் பந்தில் போல்ட் ஆனார். அதே ஓவரில் அடுத்து வந்த ஹூடாவும் ரன் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த ஷாருக் கானுடன் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார் மயங்க். இஷாந்தின் பந்தில் அடித்த பவுண்டரியுடன் தன் அரை சதத்தை கடந்தார் மயங்க். 16 ஓவர்களின் முடிவில் 117 ரன்கள் எடுத்தது பஞ்சாப். 18வது ஓவரில் ஆவேஷ் கானின் பந்தில் விக்கெட் ஆனார் ஷாருக் கான். அடுத்து வந்த ஜோர்டனும், 19வது ஓவரில் அவுட்டாகி சென்றார். கடைசி ஓவரில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 167 ரன்களில் ஆட்டத்தை முடித்தார் மயங்க். கேப்டன் ஆனதினாலோ என்னவோ இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 99 ரன்கள் எடுத்திருந்தார் மயங்க்.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது டெல்லி கேபிடல்ஸ். அதிரடி வீரர்களாக களம் இறங்கினர் ப்ரித்வி ஷா மற்றும் தவன். 2ஆவது ஓவரில் ஷமியின் பந்தில், 2 பவுண்டரி 1 சிக்ஸர் என பறக்க விட்டார் ப்ரித்வி ஷா. தவனும் அடிக்காமல் விடுவாரா என்ன, 4ஆவது ஓவருக்கு வந்த ஷமியின் பந்தில் 2 பவுண்டரிகளை தட்டினார் தவன். பவர்பிளே ஓவரில் விக்கெட் வேண்டுமே என்று வந்த ஜோர்டனின் பந்திலும், 2 பவுண்டரி 1 சிக்ஸர் என விளாசினார்கள் ப்ரித்வியும் தவனும். பவர்பிளே முடிவில் 63 ரன்கள் எடுத்தது டெல்லி அணி.
ஆனால் ஹர்ப்ரீத்தின் முதல் பந்திலேயே போல்ட் ஆனது ப்ரித்வியின் விக்கெட். அடுத்து ஸ்மித் நன்றாக ஆடி தவனுக்கு ஃபார்ட்னர்ஷிப் தந்தார். ரவி பிஷ்னோய், ஹூடா, ஹர்ப்ரீத் என்று யாருடைய பந்தையும் கண்டுகொள்ளாமல் ஆடினர். 13ஆவது ஓவரில் மெரிடித்தின் பந்தில் கேட்ச் ஆனது ஸ்மித்தின் விக்கெட். இருந்தும் 13 ஓவர்களின் முடிவில் 111 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி அணி.
அடுத்து தவனுடன் இணைந்தார் பந்த். ரவி பிஷ்னோயின் ஓவரில் 2 பவுண்டரி, சிக்ஸர் என்று அடித்து ஆடினர் இருவரும். 17ஆவது ஓவரில் ஜோர்டனின் பந்தில் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார் பந்த். அடுத்து 18 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், 18 வது ஓவருக்கு வந்த ஹெட்மயர், மெரிடித்தின் பந்தில், 1 சிங்கில்ஸ், 2 சிக்ஸர், 1 பவுண்டரி என்று அடித்து, கடைசி 2 பந்துகளுக்கு பஞ்சாப் அணியே வைடு கொடுத்ததால் வெற்றி பெற்றது டெல்லி அணி.
-சே.கஸ்தூரிபாய்