ஆம்போடெரிசின் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய 25 கோடி ரூபாயை முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார்.
தமிழத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், அதனை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், மக்கள் அனைவரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.
மேலும் இந்த நிதி கொரோனா நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என அவர் தெளிவாக அறிவித்திருந்தார். அதன்படி இன்றுவரை சுமார் 280 கோடியே 20 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்தினை கொள்முதல் செய்து அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கவும், மற்ற மாநிலங்களிலிருந்து ரயில் மூலம் திரவ ஆக்சிஜனை கண்டெய்னரில் கொண்டு வரும் வகையில் கண்டெய்னர்கள் வாங்கவும் 50 கோடி ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள 1 புள்ளி 6 லட்சம் கிட்களை வாங்கவும் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மேலும் சிப்காட் நிறுவனம் மூலம் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் உருளைகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் பிற மருத்துவ கருவிகளை வாங்கவும் 41 கோடியே 40 லட்சம் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவையான ஆம்போடெரிசின் உள்ளிட்ட மருந்துகளை கொள்முதல் செய்ய 25 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
– மூவேந்தன்