இந்தியத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையின் புதிய அத்தியாயம்தான் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு முந்தைய வாக்குப் பதிவின் வரலாற்றை நாம் பார்க்கப் போனால்…
1950 ஜனவரி 26-ம் தேதி இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முதல்நாள், அதாவது ஜனவரி 25 அன்று அரசமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரே ஒரு ஆணையரைக் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டு மார்ச் 21-ம் தேதி முதல் தேர்தல் ஆணையராக சுகுமார் சென் நியமிக்கப்பட்டார். முதல் முறையாக, சாதி, மத, பாலின, சமூக அந்தஸ்து உள்ளிட்ட எந்த பேதமும் இல்லாமல் 21 வயது நிரம்பிய அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் அரசைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை கிடைத்தது. இதையடுத்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கான முதல் பொதுத் தேர்தலின் வாக்குப் பதிவு 1952 ஜனவரி 2ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது அனைவருக்கும் வாக்குரிமை தருவது குறித்து பல தலைவர்களுக்கு தடுமாற்றமும், சந்தேகமும் இருந்தது. ஏனெனில் அப்போது இந்திய மக்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். இவர்களால் யோசனை செய்து பொறுப்புடன் வாக்களிக்க முடியுமா?, இந்த முடிவு ஜனநாயக முயற்சிக்கு வெற்றி தேடித் தருமா? – என்பதே எல்லோருக்கும் இருந்த சந்தேகம். எழுத்தறிவு குறைந்த, எளிய மக்கள் பங்கேற்ற தேர்தல் என்பதால் முதல் தேர்தலில் வாக்களிக்கும் முறை வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு கட்சிக்கும்/ வேட்பாளர்களுக்கும் தனித்தனிச் சின்னம் பொறித்த வாக்குப் பெட்டிகள் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்குச் சீட்டைப் பெறும் வாக்காளர்கள் அதனை மடித்து தாங்கள் விரும்பும் கட்சியின் பெட்டியில் போட்டுவிட்டு செல்ல வேண்டும் இப்படித்தான் தொடாக்ககாலத் தேர்தல் நடைபெற்றது. எல்லாக்கட்சியின் சின்னங்களும் பொறித்த வாக்குச்சீட்டில் தேவையான சின்னத்தில் முத்திரையிட்டு ஒரே பெட்டியில் போடும் முறை பிறகுதான் வந்தது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இயந்திரங்கள் உலகெங்கும் பல்வேறு துறைகளில் பயன்பாட்டுக்கு வந்தன. அதன்பிறகு வந்ததே தற்போதைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம். ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்துவதில் எற்படும் சிக்கல்களையும் கால விரயம், பண விரயம் ஆகியவற்றையும் குறைக்கவே இம்முறை கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது.
மத்திய அரசு நிறுவனங்களான பாரத் மின்னணு நிறுவனம், இந்திய மின்னணு கழகம் ஆகியவை இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களைத் தயாரித்து தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகி வருகின்றன.
1982ம் ஆண்டு கேரளாவின் பரூர் தொகுதி இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பரிசோதனை முறையில் பயன்படுத்தப்பட்டன. பிறகு 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் 10 லட்சத்து 75 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஒரு மின்னணு இயந்திரத்தில், 16 வேட்பாளர்கள் வீதம் கொண்ட 4 வாக்குப்பதிவு சாதனங்களை இணைக்க முடியும். இந்த வகையில் 64 வேட்பாளர்களுக்கு ஒரு மின்னணு இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 3840 வாக்குகளை பதிவு செய்ய முடியும். ஒரு மிண்ணனு வாக்கு இயந்திரமானது கட்டுப் பாட்டு கருவி, ஓட்டுப்பதிவு கருவி என இரு பகுதிகளைக் கொண்டது. கட்டுப்பாட்டு கருவி வாக்குப்பதிவு அலுவலர் இருக்கும் இடத்திலும், ஓட்டுப்பதிவு கருவி வாக்காளர் ஓட்டளிக்கும் மறைவான இடத்திலும் இருக்கும். இந்த இரு கருவிகளும் கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.
அலுவலர் பட்டனை தட்டியதும் விளக்கு ஒளிரும். அப்போது நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ, அந்த சின்னத்துக்கு பக்கத்தில் இருக்கும் பொத்தானை அழுத்த வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்கு விவரங்களை மாற்றவோ, சேதப்படுத்தவோ முடியாது. ஓட்டுப்பதிவு முடிந்ததும், மூடுவதற்கான பொத்தானை அழுத்திவிட்டால் இயந்திரம் அதன் பின் எந்த புள்ளிவிவரத்தையும் ஏற்காது. மொத்தம் என்ற பொத்தானை அழுத்தினால், அதுவரை பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கையை காட்டும். இதை 17-ஏ படிவத்தில் உள்ள வாக்காளர் பதிவு புத்தகத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம். யாராவது ஓட்டுச் சாவடியை கைப்பற்ற முயன்றால், தலைமை அலுவலர் ‘முடிவு’ பொத்தானை அழுத்தி ஓட்டுப்பதிவை நிறுத்தி விட முடியும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் நடைமுறைக்கு வந்த பிறகு வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்று வந்த கள்ள ஓட்டுக்கள் ,வாக்குச் சாவடியை கைப்பற்றுதல் போன்ற முறைகேடுகள் குறைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்கு விவரங்களை மாற்றவோ, சேதப்படுத்தவோ முடியாது என்று உறுதியாகக் கூறும் இந்தியத் தேர்தல் ஆணையம், அதன் நம்பகத் தன்மை குறித்து எழுப்படும் சந்தேகங்களுக்கு அவ்வப்போது விளக்கமளித்து, அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை புறந்தள்ளி வந்துள்ளது. சமீபத்தில் விவிபாட் – போன்ற வாக்கு சரிபார்ப்பு வசதிகளும் அளிக்கப்பட்டு உள்ளன.
ஆனால் இன்னொரு பக்கம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிரான கருத்துகளுக்கும் பஞ்சம் இல்லை. தொழில்நுட்பத்தில் இந்தியாவை விடவும் மேம்பட்டு உள்ள அமெரிக்காவும் ஜப்பானும்கூட வாக்குச் சீட்டு முறையைப் பயன்படுத்தும்போது, இந்தியாவுக்கு ஏன் எந்திரம் தேவை? – என்றும், எந்திரங்கள் அனைத்தையும் ஹேக் செய்ய இயலும் என்பதே அறிவியல் அப்படி இருக்க, வாக்குப் பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியாது என்பதை ஏற்கவில்லை – என்றும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுக்கு எதிரானவர்கள் கூறி வருகிறார்கள்.
தற்போது நடைபெற்றுவரும் 5 மாநில பேரவைத் தேர்தல்களில் கூட மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் ‘எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு விழுகின்றது’ – என்ற குற்றச்சாட்டைக் கேட்க முடிகின்றது. மேலும் அசாமில் வாக்குப் பதிவு எந்திரத்தையே காரில் கொண்டு சென்றதையும் பார்க்க முடிந்தது. இது போன்ற சம்பவங்கள் சந்தேகங்களுக்கு வலுவூட்டுகின்றன.
வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான இந்த சந்தேகங்கள் மக்களுக்குத் தீரும்வரையில் அரசு உரிய விளக்கங்களைக் கொடுக்க வேண்டும், இது குறித்து கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கும் விளக்கப்பட வேண்டும். இல்லை என்றால் இந்த சந்தேகம் இந்திய ஜனநாயகத்தின் உயிர்மூச்சாக உள்ள தேர்தல் அமைப்பின் மீதான மக்களின் மொத்த நம்பிக்கையைக் குலைத்துவிடும் அபாயமும் உள்ளது.
- பிரியா வேலு