தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் முறையாக நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நீட் தேர்வு ரத்து, மாநில அரசுகளே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்துவது, செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருவது உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாளை பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.சந்திக்க உள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் அவரை தமிழ்நாடு சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன், திமுக மக்களவைக் குழுத் தலைவர் டிஆர்பாலு, திமுக எம்பிக்கள் உள்ளிட்டோர் வரவேற்க திட்டமிட்டுள்ள நிலையில், சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை மரியாதை அளிக்கப்பட உள்ளது.
அந்த இல்லத்தில் முதல்வர்கள் தங்குவதற்கான தனிச்சிறப்பு அறையில் மு.க.ஸ்டாலின் தங்கவுள்ளார்.
குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அறையை தான் மு.க.ஸ்டாலின் பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாடு முதல்வராக மு.கருணாநிதி இருந்தபோது கடைசியாக டெல்லி சென்ற சமயத்தில் பயன்படுத்திய கார் இன்னும் டெல்லியில் உள்ள திமுக எம்பி வீட்டில்தான் நிறுத்தப்பட்டுள்ளது.
அதனை பயன்படுத்தி பிரதமர் இடத்திற்கு மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் பிரதமர் சார்பில் சிறப்பு கௌரவம் அளிக்கும் வகையில் புல்லட் ஃப்ரூப் காரை அனுப்பி மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு வரவேற்க அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.