”காக்கும் கையெழுத்து” – மரணத்தின் விலை தொடர். அத்தியாயம் 4.

SHARE

ஆம்புலன்ஸ் வந்தது..

ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தவளை அவசர அவசரமாக ஸ்ட்ரெச்சரில் ஏற்றினார்கள்.

“யாருங்க ஆம்புலன்ஸ்க்குக் கால் பண்ணுனது..?” எனக் கேட்டார் ஆம்புலன்ஸில் வந்தவர்.

சுற்றிலும் அமைதி.. யாரும் வாய் திறக்கவில்லை… யார்..? யார்..? என ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்களேயொழிய நான்தான் அழைத்தேன் என யாரும் ஒப்புக்கொள்ளவோ.. முன் வரவோ இல்லை..

“ஏங்க இப்படி அமைதியா இருந்திங்கன்னா எப்படிங்க… யாராவது ஒருத்தர் வாங்க… ஹாஸ்பிடல் வரைக்கும்…” என்று அந்த ஆம்புலன்ஸில் வந்தவர் கூற அதுவரை அங்கு கூடியிருந்த கூட்டம் மெதுவாகக் கலைய ஆரம்பித்தது..

உயிருக்கு போராடியபடி, துடித்துக் கொண்டிருக்கிற அவளை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இப்படி அலட்சியமாக இருக்கிறார்களே என ஆம்புலன்ஸ் ஊழியர்களின் மீது புகழேந்திக்குக் கோபம் வந்தது..

“சார் முதல்ல அவங்களை ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போங்க… யாரும் இல்ல போல அவங்களுக்கு…” என்று அந்த நபரிடம் புகழேந்தி சொன்னான்.

“இல்ல சார்… இவங்களை கொண்டு போற வழியில இவங்களுக்கு ஏதாவது நடந்துருச்சுன்னா.. நாங்கதான் கைகட்டி பதில் சொல்லனும்… அதுக்குத்தான் கூட ஒருத்தரை ஏறச் சொல்றோம்.. எங்களுக்கும் கொஞ்சம் சப்போர்ட்டா இருக்கும்… கூட வர்றதுனால எந்த பிரச்சனையும் வராது சார். இப்பதான் கவர்மெண்ட்டே சொல்லிருச்சே… உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்குறங்களை யாரு வேணா… ஹாஸ்பிடல்ல சேர்க்கலாம்… போலீஸ் யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டாங்க-னு…” என்று கூறினான்.

இப்போது புகழேந்தியைச் சுற்றியிருந்தக் கூட்டம் மொத்தமாகக் கலைந்து சென்றிருந்தது. அந்த இடத்தில் தற்போது புகழேந்தியும் அந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களும் மட்டும்தான் நின்றிருந்தனர்.

தன்னை சுற்றி நின்றிருந்த மொத்தக் கூட்டமும் நழுவிச் சென்றதை அப்போதுதான் புகழேந்தி கவனித்தான்.

“பார்த்தீங்களா சார்… கூட யாராவது வாங்கனு கூப்பிட்டதும் எவனாவது இங்க நின்னானா..? ஓடிட்டானுங்க… சார் உங்களை பார்த்தா நல்ல மனுஷனா தெரியுது… கொஞ்சம் நீங்களாவது கூட வர்றீங்களா சார்… ப்ளீஸ்… அந்தம்மாவ சீக்கிரம் ஹாஸ்பிடல் கொண்டு போனாத்தான் காப்பாத்த முடியும்… ” என்று கெஞ்சும் தொனியில் சொன்னான்.

“சரி வாங்க… நானே வர்றேன்… ” எனக் கூறியபடி அந்த ஆம்புலன்ஸில் ஏறி அமர்ந்தான் புகழேந்தி.

அவசர ஒலியை எழுப்பியபடி ஆம்புலன்ஸ் மருத்துவமனையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது…

வாகனத்தின் உள்ளே அவள் ஸ்டெச்சரில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். வலியால் முனகினாள். அவளது ரத்தத்தை அருகே இருந்த செவிலிப் பெண் துடைத்துக் கொண்டிருந்தாள். அந்த காட்சியை புகழேந்தி பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது கண்களில் கண்ணீர் வழிந்தது.

யாரென்றே தெரியாத, யாரோ ஒருத்திக்காக… கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த புகழேந்தியை பார்த்து ஆச்சர்யப்பட்டாள் அந்த செவிலிப் பெண்.

வாகனம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் காற்றைக் கிழித்தபடி விரைந்து சென்று கொண்டிருந்தது…

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவளைப் பார்க்க புகழேந்திக்குப் பாவமாக இருந்தது.

‘இவள் நல்லவளோ கெட்டவளோ ஒருவேளை இவளுக்கு பணம் கொடுத்திருந்தால், இந்த விபத்தைத் தடுத்திருக்கலாமோ’ என்ற குற்ற உணர்ச்சியே அவனைப் பாடாய்ப்படுத்தியது..

அந்த நேரத்திலும் அவளது கண்கள் அவனை மட்டுமே பார்ப்பது போலிருந்தது..

அவனோ குற்றவுணர்ச்சியால் புழுவெனத் துடித்துக் கொண்டிருந்தான்..

ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குள் நுழைந்ததும்.. அவசர அவரமாக அவளைக் கீழிறக்கினார்கள். அவனும் தன் பங்கிற்கு உதவினான். அவளுடைய ரத்தம் அவனது கைகளில் பட்டுப் பிசுபிசுத்தது…

ரத்தம் தோய்ந்த கைகளுடன் அவளை சுமந்து கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவு உள்ள அறையை நோக்கி ஒடினார்கள்.

மருத்துவமனை பணியாளர்கள் ஓடி வந்து அவளைத் தங்கள் ஸ்டெச்சரில் ஏற்றிக் கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவு வார்டுக்குள் சென்றனர்.

கதவு மூடப்பட்டது.

ஆம்புலன்ஸ் பணியாளர் நோட்டுப் புத்தகம் ஒன்றை புகழேந்தியிடம் நீட்டி…
“சார் இந்த ஃபார்ம்ல ஒரு கையெழுத்து மட்டும் போடுங்க” என்றார்.

“இது எதுக்கு..? நான் எதுக்கு கையெழுத்துப் போடணும்.. ?” என புகழேந்தி கேட்டான்.

“சார் நீங்க பயப்படுறதுக்கு ஒண்ணும் இல்ல.. நீங்க அந்த பேஷண்ட் கூட வந்திங்க.. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியாச்சு .. ஆம்புலன்ஸ் ல வர்ற வரைக்கும் அவங்களுக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கலை.. சரியான நேரத்துக்கு ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து சேர்த்தாச்சு.. அப்படிங்கறது மட்டும்தான் இதுல இருக்கும்.. வழக்கமா பேஷண்ட்க்கு வேண்டியவங்க யாருகிட்டயாச்சும் கையெழுத்து வாங்கிப்போம்.. இந்த லேடிக்கு யாரும் இல்லனு நீங்கதான் சொன்னிங்க… இப்போதைக்கு அந்தம்மாக்கு ஆதரவா நீங்க மட்டும்தான் வந்துருக்கீங்க.. அதான் உங்க கையெழுத்தக் கேட்டேன். தயங்காம போடுங்க சார்.. ” என்று அந்த நோட்டுப் புத்தகத்தை நீட்டினான்.

அந்தப் புத்தகத்தை வாங்கினான். ரத்தக் கறை படிந்த அவனது கைகள் பேனாவை வாங்கி தன் கையெழுத்தைக் கிறுக்கியது..

மேற்படி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அந்தப் பெயர் தெரியாத ‘அவளுக்காக’..
தன்னால் அவமானப்படுத்தப்பட்ட அந்த பெயர் தெரியாத ‘அவளுக்காக’ …
தன் குழந்தையைக் காணவேண்டும், அதற்கு பணம் வேண்டும் என கைநீட்டி யாசகம் கேட்டு அலைந்து திரிந்த ‘அவளுக்காக’ …

முழுப் பொறுப்பேற்று தன் கையெழுத்தை எழுதினான் புகழேந்தி… அந்தக் கையெழுத்துதான் அவனது தலையெழுத்தையே மாற்றப் போகிறது என்பது அப்போது அவனுக்குத் தெரியாது!.

தொடரும்…


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மகசூல் – பயணத் தொடர் – பகுதி 6

Pamban Mu Prasanth

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்..!!!

Admin

மொட்டை போடுபவர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு

Admin

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் நாளை காபூல் பயணம்!

Admin

நாளை 2வது டெஸ்ட் போட்டி: இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்

Admin

”எதிர்பாராத விபத்து..!”. மரணத்தின் விலை – தொடர். அத்தியாயம் 3.

இரா.மன்னர் மன்னன்

தமிழ் வீரமே வாகையே சூடும் : ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் தமிழக வீரர்களுக்கு கமல் ஹாசன் வாழ்த்து!

Admin

வாரத்தில் 5 நாட்களுக்கு திரையரங்குகளை திறக்க மாநில அரசு அனுமதி

Admin

கரும்பூஞ்சை மருந்தை கொள்முதல் செய்ய ரூ. 25 கோடி ஒதுக்கீடு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு

Admin

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவு கொடுக்க தயார்: பிரான்ஸ் அறிவிப்பு

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு!

Admin

கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்… மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Admin

Leave a Comment