மகசூல் – பயணத் தொடர் – பகுதி 4

ஜலேபி
SHARE

இனி நானே எனக்கு

இராத்திரியே நல்ல பசி. பசியில் என்னை மறந்து தூங்கி விட்டேன். 7.30 மணிக்கு அலாரம் வைத்திருந்தேன்.  ஆனால் ஆர்வத்தில் முன்னமே எழுந்துவிட்டேன். 

கூகுள் ட்ரான்ஸ்லேட்டரைத் தயாராக வைத்துக் கொண்டேன். வெளியே போய் சாப்பிட திட்டம். ஒரு  சாய் குடித்தேன்.

ஆமா… விடியும்போது ஒரு நல்ல செய்தி வந்திருக்க வேண்டுமே… என்னாச்சு? விக்ரம் லேண்டர் குறித்து கூகுளிடம் கேட்டேன். தோற்றுப்போனதாக சில துண்டுச் செய்திகள். விரிவாகப் பார்த்தாலும், அதுதான். நடக்கட்டும்.

 

அப்படியே நாஸ்டா ஓவர். அடுத்து நம்ம வேலையை பார்க்க வேண்டியதுதான். மீண்டும் அறைக்குப் போய்த் தயாராகி வெளியில் வந்தேன். 

இனி எனக்கு நான் மட்டும் என்ற எண்னம் வந்தது. வெளியில் வந்து ஒரு பீடா கடை காரரிடம்,

“பையா, கேஸ்லா கே கைசே ஜானி” என்று ஒப்புவித்தேன். 

அவர் இந்தியில் பதில் சொன்னார். எனக்கு வேண்டியது கிடைத்தது. 

“வலதுபக்கம் பஸ் இஷ்டாண்ட் (stand) இருக்கிறது. அங்கு போய் பெத்துல் போக வேண்டிய வண்டியில் ஏறி, கேஸ்ல செல்”  என்பதுதான் அந்த பதிலில் என் புரிதல். 

“20 ரூபாய் கட்டணம். 30 நிமிடங்கள் பயணம்” என்று சொன்னார். 

நம்மிடமிருந்த தன்யவாத்தையும், கொஞ்சம் சிரிப்பையும் அள்ளிப்போட்டு விட்டு வந்தேன். 

பல்லுல தான் கறை. மற்றபடி பாசமான மனிதன். இரவு வரும்போது இவர் கடையில் பானி பூரி சாப்பிட வேண்டும். 

பஸ் இஷ்டாண்டுக்கு வந்தால் சாஸ்திரத்துக்கு கூட ஆங்கிலம் இல்லை. எல்லாம் இந்தி. ஆனால் namitha என்று மட்டும் ஒரு பேருந்தில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் யாரோ ஒரு புண்ணியவான். 

இருந்து என்ன செய்ய?? 

யாராவது ஆறுதலாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒருவன் கேட்பதால், யார் வேண்டுமானாலும் ஆறுதல் சொல்லலாம் என்று அர்த்தமில்லையே. இந்த நமிதாவும் அப்படித்தான்.

நமக்கு ஆங்கிலம் இருந்தால் நன்றாக இருக்கும். அது நமிதாவின் பெயராக இருப்பதில் பயனென்ன? 

அங்கு கூவிக்கொண்டிருந்தபெரியவரிடம் கேட்டேன். “பெத்துல் கா காடி”

நான் முடிப்பதற்குள் பதில் சொன்னார். 

“பாத் மே”. “ச்சல்”

பிறகு வரும் என்று சொன்னதாக புரிந்து கொண்டு நின்றேன். குறுக்கே வந்து நின்ற ஒரு பேருந்து பெத்துல் பெத்துல் என்றது.. 

ஓடிப்போய், ஏறாமல் கீழிருந்து கேட்டேன். கேஸ்லா?? 

ஆவ் ஆவ் என்றார். வடிவேலுவுக்கு மனதார நன்றி சொல்லி விட்டு உள்ளே ஏறினேன். 

இப்போது சீட் கேட்க வேண்டும். பான்பராக் துப்பப்படாத சீட் தேடியதால் ஜன்னலோரத்தை தவிர்த்தேன். ஆனால் வேடிக்கை பார்க்க வேண்டுமே. 

சரி போகட்டும் முன்னே பார்ப்போம் என்று நகர்ந்தேன். அதற்குள், பின்னே இருந்த இரண்டு ஜன்னல்களும் காலி. 

இப்போது யாருக்காவது அருகில் தான் அமர வேண்டும். அதற்கு கேட்க வேண்டும். தானாக இடம்தருபவர்கள் யாரும் இல்லை போல.

மே ஆப்கா பாகல் மே பைட் கர்த்தா ஹு என்று கேட்க சொன்னது கூகுள்.. 

ஆனால், பாகல் என்றால் பைத்தியமாயிற்றே.. அடுத்த என்றால் அகல் என்று தானே நேற்று புத்தகம் சொன்னது…

கேட்கப்போகும் முன் என் கல்லூரி நண்பன் பிரிட்டிஷ் தாஸ் நினைவுக்கு வந்தான்.. 

அவன் ஒரு அந்தமான் காரன். வகுப்பில் தள்ளி உட்கார் என்பதற்கு ஹட்டோ என்று வார்த்தை பயன்படுத்துவான். 

எளிமை கருதி ஹட்டோ பையா என்று பயன்படுத்தினேன்.. அதற்குள் பேருந்து கிளம்பியிருந்தது. உட்கார்ந்தேன்.. 

அடுத்த அரைமணி நேரத்தில் நான் இறங்கப்போகும் இடம் என்னை எப்படியும் மாற்றலாம். என்ன ஏதென்று தெரியாத ஊரில், ஏதோ கொஞ்ச நஞ்சம் தெரிந்த ஜோஜு அண்ணனின்  அருகமைவையும் இழந்து எங்கோ போய்க்கொண்டிருக்கிறேன்.

என்னை சுற்றி முழுக்க இந்தியும், அந்நியர்களும் தான். ஒருநிமிடம் மனதுக்குள் நினைத்துகொண்டேன். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். உடலின் திண்மையை நம்பு. உன் பலத்தை உணர். விதி என்ற சாக்குப்போக்குக்கு இடம் கொடுக்காதே. 

அடுத்து நடக்கப்போகும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நீயே காரணம். நீ சிரித்தால் சிரிப்பார்கள். அடித்தால் அடிப்பார்கள். அதைத்தாண்டி உனக்காக இவர்கள் மற்றவனை அடிக்க வேண்டுமானால், அது உன் சாமர்த்தியம். 

2000 கி.மீட்டர்களுக்கு அப்பால் நீயே உன் நேரத்தையும், பாதையையும் முடிவு செய்யும் பரிபூரண சுதந்திரத்தை பெற்றிருக்கிறாய். அசம்பாவிதங்கள் சொந்த வீட்டு வாசலிலும் கூட நடக்கலாம். காரணம் கவனக்குறைவு மட்டுமே. கவனமாயிரு. காலம் முழுக்க இனிக்கும் நினைவுகள் கிடைக்கலாம்.. 

(இதை அப்டியே பேச்சு வழக்கில் யோசிச்சீங்கன்னா, அதுதான் என் மனசில ஓடின  உரையாடல். உள்ளுணர்வு உங்களுக்காக பேசத் தொடங்கிவிட்டால், ஒருபோதும் தனிமை  கிடையாது ) 

என் எச். 69 , நாக்பூர் சாலையில் பெத்துல் நோக்கி செல்லும் பேருந்து ஏதோ காட்டுக்குள் என்னை கடத்திப்போகிறதோ என்று நினைத்தேன். அவ்வளவு நெருக்கமாக மரங்கள் சாலையின் இருமருங்கிலும் இருந்தன. 

தேவையான இடங்களில் மட்டும் மரங்கள் வெட்டப்பட்டு நடுநடுவே கான்கிரீட் காடுகளும் உருவாகி இருந்தன. ஆனாலும் அழகு அப்படியே இருந்தது. (தொலைவில் இருந்தால் எதுவும் அப்படித்தானே)

கேஸ்லா ஆனா, போல் பையா என்று நடத்துநரிடம் கேட்டிருந்தேன். இருந்தும் கூகுள் மேப்பில் பின் தொடர்ந்து கொண்டே இருந்தேன். ஏறக்குறைய நெருங்கியதாக தெரிந்தபோது எழுந்துகொண்டேன். 

யாரோ ஒரு அண்ணன். நீ எங்க போகனும்னு கேட்டார். (ஹிந்தியில் தான்) கெஸ்லா என்றேன். பொறு என்று சைகை காட்டினார். 3 நிறுத்தங்கள் கடந்து ஒரு இடத்தில் இறங்கு என்று சைகை காட்டினார். 

அவர் பெயர் கேட்டேன் (இதுவும் இந்தியில் தான்). பிரசாத் திவாரி என்றார். ஒகே பை என்று சொல்லிவிட்டு இறங்கினேன். இறங்கிய பிறகுதான் தெரிந்தது நான் ஒருவன் மட்டும்தான் இந்த ஊருக்கு வந்திருக்கிறேன். பஸ் ஸ்டாப்பிலும் யாரும் இல்லை. சொல்லப்போனால், பஸ் ஸ்டாப்பே இல்லை.  

கெஸ்லா:

கெஸ்லா. ஔஷங்காபாத் மாவட்டத்தின் ஒரு ஜன்பத். இதற்குள் 49 பஞ்சாயத்துகள் (அதற்குள் 109 குக்கிராமங்கள் ) உள்ளடங்கியுள்ளன. 

மத்திய பிரதேசத்தின் மக்கள் தொகையில் 21% பழங்குடியின மக்கள்தான். மத்திய பிரதேசத்தில் மட்டும் 49 வகையான அதிகாரப்பூர்வ பழங்குடிகள் இருக்கிறார்கள்.  இவற்றில் ஆபத்தானவர்கள் என்று அறிவிக்கப்பட்ட மூன்று பழங்குடிகளை தவிர்த்து 46 வகையான பழங்குடிகள் இந்த பிரதேசம் முழுக்க மக்களோடு மக்களாக விரவிக் கிடக்கிறார்கள். 


இந்த கெஸ்லா பகுதியில் அரசு தனி கவனம் எடுத்து கடந்த 2002ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி உருவாக்கப்பட்ட பழங்குடி முன்னேற்றத்துக்கான அலுவலகங்களில் ஒன்றான ஔஷங்காபாத் பகுதி அலுவலகம் தான் இப்போது நாம் பார்க்கப் போகும் அலுவலகம். 

கேஸ்லா குறித்த மேலும் தகவல்களுக்கு… http://www.census2011.co.in/data/village/487365-kesla-madhya-pradesh.html

இட்டார்ஸியின் முக்கியமான பகுதியான, கெஸ்லா நகரின் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருக்கிறோம். ஒருவர் வந்து உன்னை அழைத்துச் செல்வார் என்பது மட்டுமே எனக்குத் தெரிந்த செய்தி. ஆளரவமற்ற அந்த அத்துவானக் காட்டுக்குள் அந்த ஒருவருக்காகக் காத்திருந்தேன். காற்றைக் கிழித்தபடி காட்டைப் பிளந்துகொண்டு ஒரே ஒரு பைக் வந்தது.

குறிப்பு : அவருக்கு தமிழ் தெரியாது.

– தொடரும்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஏன் பாஜகவில் சேர்ந்தேன்? காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

Pamban Mu Prasanth

எதிர் கட்சிக்காரர்களால் என்னால் உறங்கவே முடியவில்லை: மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு கண்ணீர் பேச்சு!

Admin

இந்தியர்களின்இதயங்களில் எப்போதும் இருப்பார் மில்கா சிங்-பிரதமர் இரங்கல்

Admin

பெகாசஸ் விவகாரம் ..பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் !

Admin

ஆண்களை அலறவிடும் பக்கிங்ஹாம் அரண்மனை – பகுதி 3: அல்லல்பட்ட அரசர்கள்

Admin

பெகாசஸ் என்றால் என்ன? யார் உருவாக்கியது எப்படி வேலை செய்கிறது?

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 8 தலைவர்… நாமினேஷன்… சூடுபிடித்த ஆட்டம்

இரா.மன்னர் மன்னன்

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாம் இடம்!

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு வேறு நியாயமா? – கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அரசுக்கு கோரிக்கை.

மனைவியை கடித்த பக்கத்து வீட்டு நாய்… கடுப்பான கணவன்… துப்பாக்கியால் சுட்டுக்கொலை

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: ம.பி.அரசு

1 comment

அரவிந்தன் வே September 9, 2021 at 9:50 am

👌… கடந்ததுவா! அல்லது உங்கள் எண்ணங்களை ஏற்றிக்கொண்டு பயணித்ததுவா அண்ணா!…..

Reply

Leave a Comment