இயற்கை ஆகச்சிறந்த கணக்கு வாத்தியார். எங்கெல்லாம் பள்ளம் உருவாகிறதோ, அதற்கு பக்கத்திலேயே மலையை நிறுத்தி வைக்கும் மாயம் கொண்டது இயற்கை. ஆம், ஈழத்தமிழர் வரலாற்றைப் பற்றியும், வீரஞ்செறிந்த இறுதிகட்ட போர் பற்றியும் உண்மைக்கு மாறான திரைப்படங்கள் வரிசைகட்டி வரும் நிலையில், சத்தமே இல்லாமல் சத்தியத்தை ஏந்தியபடி வந்து நிற்கிறது மேதகு திரைப்படம்.
காற்றுக்கென்ன வேலி, கன்னத்தில் முத்தமிட்டால், பேமிலி மேன், ஜெகமே தந்திரம் போன்ற திரைப்படங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈழத் தமிழர் குறித்து பேசியுள்ளன. ஆனால் அவற்றில் எதிலும் உண்மைத் தன்மை இல்லை. இன்னும் சொல்லப்போனால் உண்மைக்கு மாறான, அரசியல் திரிபுவாதத்தை அந்த படங்கள் பேசின. அந்த நரகலை நறுமணமாக காட்டத் தான் பெரும் நடிகர் பட்டாளம், உலகத்தரமிக்க கிராபிக்ஸ் காட்சிகள், பெரும் பொருட்செலவு தேவைப்படுகிறது.
ஆனால் கற்பூரத்தை மணமாக காட்ட எவ்வித முயற்சியும் தேவையில்லை. வெறும் காற்றில் வைத்தாலே போதும், அதன் மணம் காற்றோடு கலந்து விடும். அருகில் நிற்பவரையும் மயக்கி விடும். இதுதான் பேமிலி மேன், ஜெகமே தந்திரம் படங்களுக்கும், மேதகு படத்திற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்.
மேதகு பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை முழுநீள திரைப்படமாக இதுவரை எடுக்கப்படவில்லை. மாபெரும் மக்கள் தலைவனின் திரைப்படம் என்பதாலோ என்னவோ, இதுவும் மக்கள்திரள் பணம்போட்டு எடுக்கப்பட்டுள்ளது. எப்படியொரு பொருத்தம் பாருங்கள்.
1995-ம் ஆண்டு மதுரையில் அடைக்கலம் தெருக்கூத்து குழுவினர், கதை சொல்வது போல திரைப்படம் துவங்குகிறது. இன்றைய தொலைக்காட்சி, செல்போன்களின் ஆதிக்கம் இல்லாத 1970-கள் வரை பொதுமக்களின் பொழுதுபோக்கு ஊடகமாய் இருந்தவை திரைப்படங்களும், தெருக்கூத்துக்களும் தான். அதிலும் இலங்கையின் வடகிழக்கில் தெருக்கூத்து மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கலைவடிவம். அதனை திரைப்படத்தின் துவக்க காட்சியாக வைத்துள்ளார்கள்.
மேதகு பிரபாகரன் பிறந்த 1954 முதல் 1975 வரையிலான முதல் 21 ஆண்டுகளை சுருக்கமாக ஒரு மணி நேரம் 40 நிமிடங்களில் இத்திரைப்படம் பேசுகிறது. இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தமிழர் நினைவில் நிற்கப் போகிற ஒரு தலைவனின் வாழ்க்கை வரலாற்றை வெறும் இரண்டு மணிநேரத்தில் கூற முடியாது தான். ஆனால் கிடைத்துள்ள பொருளாதார வசதிக்கேற்ப உண்மையை சொல்ல முயன்ற வகையில் படக்குழுவினருக்கு பாராட்டுகள்.
இந்த முதல் பாகத்தில் அக்காலகட்டத்திய இலங்கை அரசியல் நிலவரம் மிக சுருக்கமாக அதேசமயம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதமர் பண்டாரநாயகே அவரது மனைவி ஸ்ரீமாவோ, தந்தை செல்வா என்று அழைக்கப்படும் தமிழர் தந்தை செல்வநாயகம் போன்றவர்களின் உருவத்தோற்றம் ஒத்த நடிகர்களை தேர்வு செய்ததில் இருந்தே திரைப்படத்தின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கிறது.
இலங்கையின் பிரச்னைக்கு காரணமான பண்டாரநாயகேவின் சிங்கள இனவாத நடவடிக்கைகளையும், அதையொட்டி நடைபெற்ற தமிழர்கள் மீதான தாக்குதல்களையும் தெளிவாக காட்டியுள்ளார்கள். ஒரு வெற்றிகரமான வணிக திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதன் காட்சி அமைப்புகளில் இன்னும் பல பிரமாண்டங்களை காட்டி இருக்க முடியும். ஆனால் இதன் பொருளாதார வசதிக்கேற்ப எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த வலியை பார்வையாளர்களுக்கு கடத்திய வகையில் முக்கியமான படமிது.
இலங்கை அரசியலில் புத்த மத குருக்களின் பங்கு எந்த அளவு ஆழமானது என்பதை இத்திரைப்படம் போல் வேறெதுவும் காட்சிப்படுத்தவில்லை. தங்களை மேல்நிறுத்திக் கொள்ள புத்த பிக்குகள் தங்கள் இனத்தைச் சேர்ந்தவரையே படுகொலை செய்யும் அளவுக்கு வெறிகொண்டு இருந்துள்ளனர் என்பதை பண்டாரநாயகேவின் படுகொலை மூலம் காட்டி உள்ளனர். அவரது மறைவுக்கு பிறகு பிரதமர் பதவியில் அமர்ந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயகவின் புத்தமத ஆதரவு நடவடிக்கைகளும் உள்ளபடியே எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
மேதகு பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர், ஆகச்சிறந்த தேர்வு. இளம்வயது பிரபாகரனின் முகவெட்டு, சிகையலங்காரம், மென்சிரிப்பு, குறிப்பாக வசனம்.. அருமை.. “ஏன் திருப்பி அடிக்கல்லே” என்ற ஒரு வார்த்தையில் தான் ஒட்டுமொத்த வரலாறும் அடங்கி இருக்கிறது. இதனை காட்சிப்படுத்திய இடம் சிறப்பு.. தந்தை செல்வாவின் அறவழிப் போராட்டங்களுக்கு சிங்கள அரசு அசைந்து கொடுக்காத நிலையில், மாற்று வழியை நோக்கி நடைபோட வேண்டிய அரசியல் தருணத்தை தெளிவாக எடுத்து வைத்துள்ளார்கள்.
மீண்டும் மீண்டும் புலிகள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவெனில் அவர்கள் ஆயுதம் தாங்கினார்கள் என்பதே. ஏன் தாங்கினார்கள், அதற்கான வரலாற்றுத் தருணம் என்ன என்பதை எவரும் சிந்திப்பதில்லை. அதனை மிகத் தெளிவாக இப்படம் காட்சிப்படுத்துகிறது. தமிழர்கள் மீதான தரப்படுத்துதல் சட்டம் எவ்வாறு இலங்கைத் தீவில் தமிழர்கள் சிறுபான்மையினராக மாற்றப்பட்டார்கள், எப்படியெல்லாம் கொடுந்தாக்குதலுக்கு இரையானார்கள், தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றை சின்னஞ்சிறு காட்சிகள் மூலம் ஆழமாக பதிவு செய்துள்ளார்கள்.
பொருளாதார வசதிக்காக தமிழர்கள் போராடவில்லை, ஆட்சி அதிகாரத்திற்காக தமிழர்கள் போராடவில்லை, பெயர் புகழுக்காக தமிழர்கள் போராடவில்லை.. கல்வி மறுக்கப்பட்டது, மொழிக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை என்பதால் தான் தமிழர்கள் கிளர்ந்து எழுந்தார்கள் என்பதில் அடங்கி இருக்கிறது இந்த இனத்தின் விடுதலை. இந்த தகவல் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தந்தை செல்வா காலத்தில் அறவழியிலும், அதன்பின்னர் ஆயுத வழியிலும் போராட்டங்கள் மாறியதே தவிர காரணம் ஒன்றுதான்… அது தமிழர் உரிமை.
அதேசமயம் மாற்று விமர்சனம் ஒன்றும் இந்த படத்தில் எனக்குண்டு. மேதகு பிரபாகரன் மீது உலக சமுதாயம் மீண்டும் மீண்டும் சுமத்தும் குற்றச்சாட்டு ஒன்று உண்டு. அவர் வேண்டுமென்றே வன்முறையை கை கொண்டார், வன்முறையை விரும்பினார், தீவிரவாதத்தை வளர்த்தார் என்று… படத்தில் பிரபாகரன் முதன்முதலில் துப்பாக்கியை தொடும் காட்சி மேற்சொன்ன குற்றச்சாட்டுக்களுக்கு வலுசேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. மிகுந்த காதலுடன், கண்கள் விரிய ஆவலுடன் அந்த துப்பாக்கியை பிரபாகரன் தொடுவதாக காட்சி வைக்கப்பட்டுள்ளது. வேறு வழியின்றியே திருப்பி அடிக்கும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டார்கள், பிரபாகரனும் தள்ளப்பட்டார் எனும்போது இந்த காட்சி பொருத்தமாக இல்லை.
அதேசமயம், நாயக பிம்பத்தை தூக்கி பிடிப்பதற்காக வெகுஜன திரைப்படங்களில் வைப்பது போன்ற காட்சிகள் ஏதும் வைக்கவில்லை. எடுத்துக்காட்டாக பிரபாகரன் பேருந்துக்கு தீ வைப்பது போன்ற காட்சியில் நேரடியாக ஓட்டுநரை இறங்கிப் போகச் சொல்கிறார், தீ வைக்கிறார். இந்த நம்பகத்தன்மை தான் படத்தை மேலும் நெருக்கமாக்குகிறது. அதேபோன்று யாழ் மேயராக இருந்த ஆல்பிரட் துரையப்பாவின் துரோகச் செயல் எத்தகையது, ஏன் அவரை கொல்ல புலிகள் திட்டமிட்டனர் என்பதை வலுவான காரணங்களுடன் காட்சிப்படுத்தி உள்ளனர்.
உலகத் தமிழராய்ச்சி மாநாட்டுக்கு துரையப்பா விளைவித்த இடையூறுகள் அவரது உத்தரவால் பறிபோன 9 உயிர்கள் போன்ற சம்பவங்கள் அக்கால இளைஞர்கள் மத்தியில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கும் என்பதும் அதனால் தான் பிரபாகரனும் கிளர்ந்து எழுந்தார் என நாம் காட்சிகளோடு ஒன்றிப் போகிறோம்.
மேலும் இளவயதிலேயே நண்பர்களை ஒருங்கிணைத்து, முறையாக திட்டமிட்டு, சரியான தருணத்தில் தாக்குதல் நடத்தும் அந்த பண்பை காட்சிப்படுத்துவதாக துரையப்பா படுகொலை காட்சிகள் உள்ளன. வருங்காலத்தில் மாபெரும் தலைவன் ஒருவன் உருவாக போகிறான் என்பதற்கான ஆரம்ப காட்சிகளாக அவை கட்டமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று புலம்பெயர் தமிழ் பெண்கள் அல்லது போராளிக்குழுவில் இருந்த பெண்கள் பாலியல் தொழிலில் இயல்பாக ஈடுபடுவார்கள் என கேவலமாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ள பேமிலி மேன் தொடர் வெளிவந்துள்ள நிலையில், படத்தில் தங்கள் மேல் கை வைத்த காவல்துறை அதிகாரியை தாக்கும் தமிழ் பெண்ணின் வீரம் சிலிர்க்க வைக்கிறது. இதுதான் சரியான பதிலடி.
வல்வெட்டித்துறை கடல் திட்டுக்கள், வரதராஜ பெருமாள் கோயில் முகப்பு, யாழ் மாநகர சபை போன்ற இடங்கள் நம்மை 1970-களுக்கே கொண்டு செல்கிறது. உடைகள், உச்சரிப்பு போன்றவையும் நம்மை காலயந்திரத்தில் ஏற்றி கொண்டு செல்கிறது. தெருக்கூத்து கலைஞர்களின் வர்ணனை, தமிழுக்கு அமுதென்று பேர் போன்ற பாடல்கள் உணர்ச்சிக் குவியல். பாடலுக்கான இசையும், அழுத்தமான காட்சிகளுக்கான பின்னணி இசையும் சிறப்பாக வந்துள்ளது. இசையமைப்பாளர் பிரவீனுக்கு வாழ்த்துகள். அதேசமயம் படத்தின் வேகத்திற்கு பாடல்கள் ஒரு வேகத்தடை என்பதையும் மறுப்பதற்கில்லை.
பட்ஜெட்டுக்கு தக்கவகையில் எடுக்கப்பட்டுள்ளதை தாண்டி ஒலி-ஒளி அமைப்பில் குறைகளேதும் இல்லை. அடுத்தடுத்த பாகங்கள் எப்போது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது மேதகு. அரசியலும், இன உணர்வும், திரைக்கலையும் கை வரப்பெற்ற இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் ஒரு படத்தை எப்படி எடுக்க முடியும் என்பதற்கு உதாரணம் மேதகு. இப்படத்திற்காக உழைத்த இயக்குநர் கிட்டு உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு பார்வையாளனாக, ஒரு தமிழனாக வாழ்த்துகள்.
மேதகு – பெருமிதம்.
- எழுத்தாளர், ஊடகவியலாளர் க.அரவிந்த் குமார் (முகநூல் பதிவு)