மத்தியப்பிரதேசத்தில் உள்ள கோவில் சொத்துக்களை பூசாரிகள் சட்ட விரோதமாக விற்பதை தடுக்கும் வகையில் வருவாய் பதிவேட்டில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்க வேண்டுமென நில வருவாய் சட்டத்தின் கீழ் அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் அந்த அரசாணையை ரத்து செய்தது.
இதை எதிர்த்து மத்தியப்பிரதேச அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, ஏ.எஸ். போபண்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயிலை ஒட்டிய நிலத்திற்கான உரிமையாளரின் பெயர் குறிப்பிடும் இடத்தில் தெய்வத்தின் பெயரைத்தான் எழுத வேண்டும். கோயில் நிலங்களுக்கு அக்கோயிலில் இருக்கும் கடவுள்தான் சட்டப்பூர்வ உரிமையாளர் என தெரிவித்தனர்.
மேலும் பூசாரி என்பவர் கடவுளின் சொத்தை பராமரிக்கும் ஒரு மேலாளர் மட்டுமே. இதைத்தான் சட்டம் தெளிவாக சொல்கிறது. கடவுளின் சொத்தில் மேலாளர் எனும் பூசாரி பூஜை செய்து பராமரிக்கலாம். அதை செய்யத் தவறினால், வேறொருவரை மாற்றலாம்.
மற்றபடி பூசாரி ஒருபோதும் உரிமையாளர் ஆக முடியாது. வருவாய் பதிவேட்டில் பூசாரியின் பெயரை குறிப்பிட வேண்டுமென எந்த ஒரு தீர்ப்பிலும் இதுவரை குறிப்பிடப்படவில்லை என தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.