வேல ராமமூர்த்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – நூல் மதிப்புரை

SHARE

     கடந்த முறை ஊரடங்கின் போது வாங்கிய திரு. வேல. ராமமூர்த்தி அவர்களின் நாவல்களை ஒரே மூச்சில் வாசித்து முடித்த பின் சிறுகதைத் தொகுப்புகளை மட்டும் பின்னர் வாசிக்கலாம் என்று எடுத்து வைத்ததில் இப்போது தான் மீண்டும் கைக்கு அகப்பட்டது இந்நூல்.

         இந்நூலை வாசிக்கையில், நான் நூலின் முன் அட்டையை ஏறக்குறைய ஒரு பத்து முறையேனும் திருப்பி பார்த்திருப்பேன். நாம் வாசிப்பது சிறுகதை தொகுப்பு தானா அல்லது முன்னர் வாசித்த அவரது நாவல்களின் தொடர்ச்சியா என. காரணம், கதை மாந்தர்களின் பெயர்களும் இயல்பும். வேயன்னா, சேது, அன்னம்மா, வில்லாயுதம், இருளாயி என நாவல் பாத்திரங்களே இச்சிறுகதைகளுக்கும் உயிரூட்டியுள்ளனர். 

         ஆனால், இவ்வாறு அப்பாத்திர பெயர்களையே இச்சிறுகதைகளின் மனிதர்களுக்கும் சூட்டியிருப்பதிலிருந்து ஓர் உண்மையை உணர முடிகிறது. இவையெல்லாம் வெறும் புனைவல்ல. இரத்தமும் சதையுமாய் வாழ்ந்த மனிதர்களின் உண்மைக் கதைகள் தானென்று. 

         களவினையே குலத் தொழிலாகக் கொண்டிருந்த ஒரு கிராமம் களவினைக் கைவிட்டு சம்சாரிகளாய் (விவசாயிகளாய்) மாறிய பின்னும், அவர்களிலிருந்தே ஒருவன் (சேது) போலீஸ்காரனாக ஆன பின்னும் அவனின் அந்த காக்கி உடுப்பினைக் கண்டவுடன் பழைய பயம் தங்கள் உடல் முழுவதும் பரவி, ஒடுங்கி நிற்கும் மக்களின் உளவியலை பேசுகிறது முதல் சிறுகதையான, “இருளப்பசாமியும், 21 கிடாயும்”.

         ” முடி வெட்டும் தொழில் செய்யும் தோழன் தான் இல்லையேல் நமக்கெல்லாம் ஏது அழகு; நதி நீரில் நின்று துணி தோய்ப்பவன் இல்லையேல் வெளுக்குமா உடை அழுக்கு” என எதுகை மோனையாக அமைந்த சினிமாப் பாடலினை உணர்வோடு பாடினாலும் இத்தோழர்களை இன்னமும் வீட்டின் புறவாசலோடு நிறுத்தும் பழக்கமே பல இடங்களில் தொடர்வது கண்கூடு. அதேபோல் தான், ஊர்க்காரர்களுக்காக, அவர்களின் ஒருவனாக முன்நின்று கையில் வேல்கம்போடு சண்டைக்கு கிளம்பும் சலவைத் தொழிலாளியான மாடசாமியை அவன் கூறிவிட்ட ஒற்றை வார்த்தைக்காக சாதியால் ஒன்று சேர்ந்த கூட்டம் துவைத்து துவம்சம் செய்யும் சாதிய வெறியை காட்டுகிறது “எங்க அய்யாமாருக்காக…” எனும் சிறுகதை.

         சாதியால் கீழானவனாய் சுட்டப்படுபவனின் கை என்றைக்கும் தாழ்ந்தே இருக்காது அதுவும் ஒருநாள் உயரச் செய்யும். அன்றைக்கு உயர்ந்தவனாய் தன்னை நினைத்துக் கொண்டிருப்போனுக்கு உடன் நிற்க ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்ற இன்றைய கள எதார்த்தத்தைப் பேசுகிறது “ஆசை… தோசை….” கதை.

         “கன்னிதானம்” சிறுகதையில் சேதுவும், தமயந்தியும் பழமையில் ஊறிய குல கெளரவம் பேசும் பெருசுகளால் சேராமல் போகும் துயரம் நம்மை ஆட்கொள்கிறது. ஆனால், “ஆரத்தி” சிறுகதையில் அதே பெயர்கள் கொண்ட பாத்திரங்கள், ஊர் வழமையை மீறி சித்திரைத் திருவிழாவில் மஞ்சள் நீரூற்றி சேருவதில் அத்துயரம் மறைகிறது. 

         நூலிலுள்ள சிறுகதைகளை வாசிக்கையில் நாமும் அம்மக்களில் ஒருவராக மாறிவிட்டதாக எண்ணச் செய்வதே நூலாசிரியரின் எழுத்தின் வலிமை. 

         இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த இரு உவமைகளைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

         –> ஒரு பெண் புஷ்பவதியாகிப் பருவம் தாண்டுவதுபோல் இரவு விடிந்து கொண்டிருந்தது.

         –> மகளை நிச்சயம் பண்ண வரும் மாப்பிள்ளையைக் கண்டது போல் மழையைக் கண்டதும் சம்சாரிகளுக்கு சந்தோசம். 

          அற்புதமான சிறுகதைகள். வாசிக்க வாசிக்க திகட்டாத போதையேற்றும் எழுத்து நடை. அவசியம் வாசித்து மகிழ வேண்டிய நூல்.

தேர்வும் தொகுப்பும் : ந.முருகேச பாண்டியன்

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

பக்கங்கள் : 128

விலை : ₹ 150

– திவாகர். ஜெ 


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகெங்கும் தமிழர் தடம் – நூல் மதிப்புரை

’சுளுந்தீ’ தமிழர் வரலாற்று நாவல் – நூல் மதிப்புரை

எனதருமை டாஸ்டாய் – உலக ஆளுமைகளுடன் உள்ளூர்மொழி பயணம் – புத்தக அறிமுகம்

Admin

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை – நாவல் மதிப்புரை

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கர்னலின் நாற்காலி’ – நூல் மதிப்புரை.

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காட்சிகளுக்கு அப்பால்’ – நூல் மதிப்புரை.

முனைவர் சு.தினகரன் எழுதிய ’101கேள்விகள் 100 பதில்கள்’ – நூல் மதிப்புரை

கீழடியைப் பின்னணியாகக் கொண்ட ’ஆதனின் பொம்மை’ நாவல் – மதிப்புரை

சுப. உதயகுமாரன் எழுதிய ‘பச்சை தமிழ்த் தேசியம்’ – நூல் மதிப்புரை:

கபிலன் வைரமுத்து எழுதிய மெய் நிகரி நாவல் – மதிப்புரை

தனித்தமிழர்நாடு: மண்மீட்புக்கான வரைப‌டங்கள், சான்றுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்

இரா.மன்னர் மன்னன்

இறையன்பு ஐ.ஏ.எஸ். இத்தனை நூல்களை எழுதி இருக்கிறாரா ? வியக்க வைக்கும் பட்டியல்!.

Leave a Comment