’சுளுந்தீ’ தமிழர் வரலாற்று நாவல் – நூல் மதிப்புரை

SHARE

காலச் சக்கரத்தை நாம் சுழற்றும் போது இருட்டு மட்டுமே அதில் அதிகம் புலனாகிறது. போதுமான வெளிச்சம் நமக்கு கிடைப்பதில்லை. மன்னர்களின் பெருமைகளை, வெற்றிகளை மட்டுமே பேசுவது வரலாறு என்று நாம் பழகி வந்துள்ளோம்.

மன்னர்கள் தேசத்தின் நிர்வாகிகள் மட்டுமே. அந்த நிர்வாகத்தின் கீழ் பல சமூக இனக்குழுக்கள் பல அடுக்குகளாக உள்ளன. இவை தான் தேசத்தின் வரலாற்றை தாங்கி பிடிக்கும் அஸ்திவாரங்கள். இவற்றின் வலிமை தான் வரலாற்றை யுகங்கள் தோறும் பேச வைக்கிறது. சமூகத்தின் அடிநிலை மக்களைப் பற்றிய வரலாறு உள்ளது உள்ளபடி எழுதப்படும் போது தான் ஒரு தேசத்தின் உண்மையான வரலாறு புலனாகும். இதனை பெரும் முயற்சியில் மட்டுமே அகழ்ந்து பார்த்து தெரிந்து கொள்ள முடியும். அதற்கான பெரிய வெளிச்சக் கீற்றைத்தான் சுளுந்தீ கசிய விட்டுள்ளது.

மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கரிடம் (1662 – 1682) தளபதியாக இருந்த அப்பய நாயக்கரின் மகன் கதிரியப்ப நாயக்கர் தான் இந்நாவலின் மையக் கதைக்களமான கன்னிவாடியை (கொடைக்கானல், பழனி, வேடசந்தூர் பகுதிகள்) நிர்வகிக்கும் அரண்மனையார்.

இந்த அரண்மனையின் நாவிதனாகவும் மேதமை கொண்ட பண்டுவனாகவும் (மருத்துவர்) பன்றிமலையில் யோகத்திலும் சித்த மருத்துவத்திலும் கரை கண்ட சித்தரின் சிஷ்யனுமான நாவிதர் இராமனின் மூலம் நாவிதர் குலத்தின் அறிந்திடாத அரிய செய்திகள் முன்வைக்கப்படுகின்றன .

மூன்று பாகங்களாக விரித்து எழுதியிருக்க வேண்டிய நாவல். ஒரு புத்தகத்திலே நெருக்கமாக புனையப்பட்டுள்ளதால் இதன் செறிவையும் கனத்தையும் முதல் வாசிப்பிலேயே அறிமுக வாசகர்கள் தாங்கிக் கொள்வது கடினம். அவ்வளவு புதிய தகவல்களும் நுணுக்கமான மருத்துவக் குறிப்புகளும் பத்திக்குப் பத்தி விரவிக் கிடக்கின்றன.

இந்நாவலுக்கான சாரத்தையும் ஆதாரபூர்வமான தடயங்களையும் ஆராய தனது வாழ்நாளில் பெரும் பகுதியை செலவிட்டிருக்கும் இரா.முத்துநாகுவுக்கு வாழ்த்துகள். தற்காலத்தில் சித்த மருத்துவம் எழுந்து நிற்கும் போதெல்லாம் இடிக்கிறது. அது ஏன் என்று இந்த நாவலைப் படித்தப் பின்பு தான் புரிந்து கொண்டேன்.

நாவலில், மருத்துவ சிகிச்சை முறைகளும் அதற்கான மருந்து செய்முறைகளையும் பன்றி மலை சித்தரிடம் பணிந்து கற்கும் நாவிதர் இராமன் அனைவருக்கும் அதன் பலனை சேர்ப்பிக்கிறான். புகழ் எப்போதும் பகை வளர்க்கும். அதற்கு இரையாகிப் போகிறான் மகாப்பண்டுவன் இராமன்.

அவன் மகனுக்கு நாவிதர் தொழில் வேண்டாம் ஒரு போர் வீரனாகத்தான் அவன் உருவாக வேண்டும் என்பது அவன் கனவாகவும் இருந்தது. அதற்கான பயிற்சி முறைகளில் மகனைப் பட்டை தீட்டுகிறான்.

நாவிதன் மகன் ஒரு படை வீரனா…? – என அரசு, சமூகம், எதிரிகள் என அனைத்து பக்கத்திலும் சூழ்ச்சிகள் அவனை சூழ்கின்றன. நாயகன் அவற்றையெல்லாம் எப்படி முறியடித்து தன் எண்ணத்தை சாதித்தான் என்பது புத்தகம் முழுவதும் படித்தறிய வேண்டிய சுவாரஸ்யம்…

ஒவ்வொரு சொலவடைக்கும் ஒரு கதை நீள்கிறது… ஒவ்வொரு பதத்திற்கும் அதன் அர்த்தம் தெரிய விளக்கமான , சுவையான கதை பாய்கிறது.

சித்த மருத்துவத்தில் செந்தூர பற்பம் செய்ய பயன்படும் மூலச் சரக்குகள் சில வெடி மருந்துக்கும் உதவுகின்றன. இதனால் சித்த மருத்துவர்களை (பண்டுவர்கள்) சந்தேகித்து கொல்கிறது அரசு. மருந்திற்கான மூலப் பொருட்கள் வாங்க அரசு முத்திரை கட்டாயமாக்கப்படுகிறது. போகிறப்போக்கில் அரசு அதிகாரிகளுக்கு வேண்டாத குடியானவர்களும் கொல்லப்படுகின்றனர்.

சவரக்கத்தியை சவரத்திற்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்ற சத்தியத்தை அரசு மதிப்பதில்லை. தேவையேற்படும் போது நாவிதர்களை சூழ்ச்சியான கொலைத் தொழில் செய்யவும் பயன்படுத்திக் கொள்கிறது. ‘அரசாட்சியை அழித்த வரலாறும் அம்பட்டையன் சவரக்கத்திக்குஉண்டு’ – என்பது சற்று கிலியைத் தருகிறது.

ஒரு மனிதன் பிணமான பின்பு செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்களை ஒன்று விடாமல் பல விளக்கங்கள் மூலம் ஒரு அத்தியாயம் முழுக்க எடுத்துரைக்கிறார் ஆசிரியர். அதில் நாவிதர் உட்பட இன மக்களின் பங்களிப்பும் தெளிவாகிறது.

நாவிதர் மற்றும் பண்டுவக் குலத்தின் இன வரலாறாக மட்டுமே இதைப் பார்க்க முடியாது. ஏகாளி, வாடன், தீக்கொளுத்திகள், மலைக் குடிகள்.. என இன்னும் பல எளிய அடித்தட்டு மக்களின் ஒருங்கிணைந்த வரலாற்று ஆவணமாகக் கொள்ள வேண்டும்.

பண்டுவன் இராமனுக்கு பின் அவன் மகன் செங்குளத்து மாடன் பற்றிய வரலாறு நீள்கிறது. இராமன் வாழும் அத்தியாயங்களில் அவன் குணத்தைப் போன்றே மென்மையாக நகர்கிறது கதை. மாடன் வந்தப் பிறகு அவன் ஓட்டிப் போகும் குதிரையின் பாய்ச்சல் போல் புயல் வேகமெடுத்து நகர்கிறது.

கன்னிவாடி மட்டுமல்லாது சுற்றியுள்ள பல பகுதிகள் மற்றும் மனிதர்களைப் பற்றியும் குறிப்பாக பன்றிமலைப் பற்றிய தரவுகள், கதைகள் , அங்கு வசித்த சித்தர் எனப் புத்தகம் படித்து முடித்தப் பின்பும் பல நாள் கண் முன் நிழலாடுகின்றன. சுளுந்தீயின் வெளிச்சம் நினைவுகளின் பின் தொடர்ச்சியாக நிற்கிறது. இதுவே இப்புதினத்தின் வெற்றி.

முதற் பதிப்பு : 2018

ஆதி பதிப்பகம்

பக்கங்கள் 480

விலை: ரூ.450

  • மஞ்சுநாத்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எனதருமை டாஸ்டாய் – உலக ஆளுமைகளுடன் உள்ளூர்மொழி பயணம் – புத்தக அறிமுகம்

Admin

வேல ராமமூர்த்தி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – நூல் மதிப்புரை

முனைவர் தொல்.திருமாவளவன் எழுதிய ’அமைப்பாய்த் திரள்வோம்’ – நூல் மதிப்புரை.

சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் எழுத்தாளர் இமையம்

Admin

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கர்னலின் நாற்காலி’ – நூல் மதிப்புரை.

வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப் பரம்பரை – நாவல் மதிப்புரை

வெளியானது மன்னர் மன்னன் எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூல்…

உலகெங்கும் தமிழர் தடம் – நூல் மதிப்புரை

அம்பை எனும் அழகியல் கலகக் குரல்! – சாகித்ய அகாதமி விருது பெற்ற பெண்ணியப் படைப்பாளியின் அறிமுகம்.

இரா.மன்னர் மன்னன்

தனித்தமிழர்நாடு: மண்மீட்புக்கான வரைப‌டங்கள், சான்றுகள் மற்றும் சிந்தனைகளின் தொகுப்பு – நூல் அறிமுகம்

இரா.மன்னர் மன்னன்

என் பெயர் நுஜூத் வயது 10 விவாகரத்து ஆகிவிட்டது – அரபு மொழிபெயர்ப்பு நூல் மதிப்புரை.

‘மு.க.ஸ்டாலின் பரிசளித்த புத்தகம்’ கூகுளில் தேடும் இளைஞர் பட்டாளம்

Admin

Leave a Comment