தமிழகத்தில் மிகவும் முற்காலத்திலேயே இரும்புக் கொல்லர்கள் வாழ்ந்த பகுதி ஆதிச்ச நல்லூர். ஆதி தச்ச நல்லூர் – என்பது மருவி ஆதிச்சநல்லூர் என மாறி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆதிச்சநல்லூர் புதைமேட்டில் இதுவரை நடந்த அகழாய்வுகளில் முதுமக்கள் தாழிகள், பானைகள், எலும்புகள், இரும்புக் கருவிகள், வெண்கலக் கருவிகள், தங்கத் தகடுகள் – உள்ளிட்ட தமிழர் வரலாற்றுப் பொருட்கள் நிறைய கிடைத்துள்ளன.
ஆதிச்ச நல்லூரில் தற்போது நடைபெற்றுவரும் அகழாய்வில் மிக முக்கிய கண்டுபிடிப்பாக சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட நாணயம் ஒன்று தற்போது அங்கு கிடைத்து உள்ளது. இதன் முன்பக்கத்தில் சதுரமான தொட்டிக்குள் நான்கு ஆமைகள் உள்ளன. அவற்றோடு யானை, மரம் மற்றும் மீன்களின் உருவங்களும் காணப்படுகின்றன. காசின் பின்பகுதியில் மீன் சின்னம் தெளிவாக இல்லை.
இந்தவகையான நாணயங்களை சங்ககாலப் பாண்டிய அரசர்கள் மட்டுமே வெளியிட்டு உள்ளனர், அதனால் இதனை சங்ககாலப் பாண்டியர் காசு – என ஆய்வாளர்கள் உறுதி செய்து உள்ளனர்.
நாணயத்தின் முன்பகுதியில் தொட்டிக்குள் ஆமைகள் சின்னம் சங்ககாலத் தமிழர்கள் கடல் பயண வழிகாட்டுதலுக்கு உதவும் ஆமைகளை வீட்டிலேயே தொட்டி அமைத்து வளர்த்ததற்கு சான்றாக உள்ளதாகவும், யானை, மரம், மீன் – உள்ளிட்ட சின்னங்கள் அப்பகுதியின் வளத்தைக் குறிக்கக் கூடியவை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழக அகழாய்வுகளில் பாண்டியர்களின் நாணயங்கள் கிடைப்பது அரிய நிகழ்வு ஆகும்.