பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு 2 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுவருகிறது.
இந்த போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதே போட்டியில் பீகாரைச் சேர்ந்த சரத்குமார் வெண்கலம் பதக்கம் வென்றார்.
இந்த ஆண்டுக்கான பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன. வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுவின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது.
அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.