ஐபிஎல் லீக் போட்டி நேற்று, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் நடந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
வான்கடே, மும்பை
டாஸ் வென்ற சஞ்சு சாம்சன், ஃபீல்டிங் செய்வதாகவும், இரண்டு மாற்றங்கள் உடன் இன்று களம் இறங்குவதாகவும் கூறினார். ஷ்ரெயாஸ் கோபாலுக்கு மாற்றாக உனத்கட்டும், மனன் வோராவுக்கு மாற்றாக ஜெய்ஸ்வாலும் அன்று விளையாட உள்ளதாக கூறினார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர் ராணா மற்றும் கில். முதல் ஓவரில் 3 ரன்கள், 2வது ஓவரில் 5 ரன்கள், 3 வது ஓவரில் உனத்கட்டின் பந்தில், தெர்டு மேன் பக்கம் சென்ற பவுண்டரி. அதனால் அந்த ஓவரில் 6 ரன்கள், 4 ஓவரில் முஸ்தாபிஃசுரின் பந்தில் மிட் விக்கெட்டில் பவுண்டரி,. அதில் 7 ரன்கள். 5வது ஓவரில் 2 ரன்கள். 6 ஓவரில் முஸ்தாபிஃசூரின் பந்தில் 2 ரன்கள் என பவர் பிளே ஓவரில் மொத்தமே 25 ரன்கள் மட்டும் தான் எடுத்தது கொல்கத்தா அணி.
இந்த ஐபிஎல்லில், வான்கடே மைதானத்தில் இதுதான் மிகக் குறைந்த பவர்பிளே ரன்களாக இருந்தது. சிஎஸ்கே உடன் 200 ரன்கள் அடித்த அணியா என்று ஆச்சர்யமாக இருந்தது நேற்று இவர்களின் ஆட்டம். சரி பவர்பிளேவிற்கு பிறகு அடித்து ஆடுவார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. சகாரியாவின் பந்தில் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார் ராணா. அடுத்து வந்த நரைன், உனத்கட்டின் பந்தில் கேட்ச் ஆகி அவுட்டானார். அடுத்து வந்த மோர்கனும், ரன் ஓட தடுமாறி நின்று ரன் அவுட்டில் டக் அவுட்டானார். ராகுல் திரிப்பாட்டி ஓரளவிற்கு ஆடி 33 ரன்கள் எடுத்தார். அவரும் முஸ்தாபிசூஃரின் பந்தில் கேட்ச் ஆகி விக்கெட் போனது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஸலும், 1 சிக்ஸ் அடித்து, மோரிஸின் பந்தில் அவுட்டாகி சென்றார். அவர் கூடவே கார்த்திக்கும் கேட்ச் ஆகி அவுட்டாகி சென்றார். கடைசி ஓவரில் மோரிஸ் பந்தில் மறுபடியும் கம்மின்ஸ் மற்றும் மாவி இருவரும் அவுட்டாகி சென்றனர். கொல்கத்தாவின் மோசமான விளையாட்டாக இருந்தது. கடைசி 5 ஓவர்களில் மொத்தமே 38 ரன்கள்தான் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்களுக்கு 133 ரன்கள் எடுத்தது கொல்கத்தா அணி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பட்லர் மற்றும் புது ஓபனராக வந்த ஜெய்ஸ்வால் களம் இறங்கினர். 2ஆவது ஓவரில், கம்மின்ஸின் பந்தில் தொடர்ந்து 2 பவுண்டர்களை தட்டினார் ஜெய்ஸ்வால், அடுத்து மாவியின் பந்திலும் மிட் விக்கெட்டில் 1 பவுண்டரி என்று நல்ல ஆரம்பம் தந்தார். 4 வது ஓவரில் வருணின் பந்தில் எல்பிடபிள்யூ ஆனது பட்லரின் விக்கெட். அடுத்து சஞ்சு சாம்சன் ஆடத் தொடங்கினார். வந்த உடனே கவர் பாயிண்ட் கேப்பில் 1 பவுண்டரி. அடுத்த ஓவருக்கு மாவி வந்தார். அந்த ஓவரிலும், சாம்சன் 1 பவுண்டரி, ஜெய்ஸ்வால் 1 பவுண்டரி என்று ஆட்டம் வேகம் எடுத்தது. ஆனால் அடுத்து பந்திலேயே அவுட்டானார் ஜெய்ஸ்வால். டூபே வந்த உடனே, நரைனின் பந்தில் மிட் விக்கெட்டில் நல்ல ஒரு சிக்ஸர் அடித்தார். வருணின் பந்திலும், லாங் ஆஃபில் 1 பவுண்டரி தட்டி விட்டார். சாம்சனின் விக்கெட்டை எடுக்கவே அடுத்தடுத்து கம்மின்ஸ், நரைன், வருண் என பந்து வீச்சாளர்கள் முயற்சிக்க, சாம்சன் கொஞ்சமும் அசரவே இல்லை. அவருக்கு பதில் டூபேவின் விக்கெட் தான் போனது. இருந்தாலும் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் வசமே இருந்தது. 12 ஓவர் முடிவில் 92 ரன்கள் எடுத்திருந்தது அணி. அடுத்து மில்லர் ஓவருக்கு 1 பவுண்டரி என தட்டி விட்டு இறுதியில் 19 ஓவர் முடிய ஒரு பந்து மீதம் இருக்கையில், 2 ரன்கள் ஓட ஆட்டம் முடிந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானின் வெற்றிக்கு பெரிதும் உதவியது மோரிஸ் தான். ஒரு ஓவரில் 2 விக்கெட் என தன் 2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை எடுத்தார் மோரிஸ். முதல் விக்கெட் ரஸல், ரஸலின் விக்கெட்டை மோரிஸ் ஏற்கனவே 3 முறை எடுத்திருக்கிறார் என்பதற்காக சாம்சன் அவரை அனுப்பினார். அது மாதிரியே நடந்தது. மோரிஸின் ஸ்லாட் பந்தில் கேட்ச் ஆனது ரஸலின் விக்கெட். அதே போலத்தான் தினேஷ் கார்த்திக்கின் விக்கெட்டும் கேட்ச் ஆனது. ஆட்டத்தின் கடைசி ஓவரில், கம்மின்ஸின் விக்கெட், மிட் விக்கெட் பக்கம் சென்று கேட்ச் ஆனது. கடைசியாக மாவியின் விக்கெட் போல்ட் ஆகி அவுட்டானது.
– சே.கஸ்தூரிபாய்