சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறையினர் 8ஆம் கட்ட அகழாய்வை நடத்தி வருகின்றனர். இந்த அகழாய்வில் கீழடியில் இதுவரை கிடைக்காத புதிய வகை பகடைக் காய் கிடைத்து உள்ளதாக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
அதில், கீழடியில் முந்தைய 7 கட்ட அகழாய்வுகளில் அனைத்து பக்கமும் சமமான அளவுள்ள கனசதுர (Cubical) பகடைக் காய்கள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், 8ஆம் கட்ட அகழாய்வில் முதன்முறையாக செவ்வக வடிவம் (Rectangular) கொண்ட தந்தத்தினால் ஆன பகடைக்காய் கிடைத்து உள்ளது – என்று அவர் கூறி உள்ளார்.
செவ்வக வடிவ பகடைக்காயை பொதுவாக ஜோடியாக மட்டுமே பயன்படுத்த இயலும், இதன் மற்றொரு இணை காலத்தால் அழிந்திருக்கலாம். மேலும் இதன் நீளம் காரணமாக இதை உருவாக்க அதிக தந்தமும் தேவைப்படும். எனவே கீழடியில் வாழ்ந்த செல்வ செழிப்புள்ள மக்கள் இதனைப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.