இந்திய ஆணழகன் பட்டம் பெற்ற ஜெகதீஷ் லாட் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத், வடோதரா
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இரண்டாம் அலை எவ்வளவு மோசமானது என்பதை உணர்த்தும் வகையில் ஆணழகன் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
மகாராஷ்டிராவைப் பூர்விகமாகக் கொண்ட 34 வயதான ஜெகதீஷ் லாட் 2 முறை இந்திய ஆணழகன் பட்டம் வென்றவர் மற்றும் உலக சாம்பியன்ஷிப் ஆணழகன் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றவர்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் சொந்த உடற்பயிற்சி கூடம் தொடங்க குஜராத் மாநிலம் வடோதராவில் குடியேறினார். கொரோனா தொற்றால் மூச்சு விட சிரமப்பட்ட இவர் வடோதராவில் ஒரு மருத்துவமனையில் சேர்ந்து ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜெகதீஷ் லாட் சிகிச்சை பலனளிக்காமல் திடீரென உயிரிழந்தார்.
45 வயதுக்கு மேட்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் போன்றவர்களை மட்டுமே கொரோனா பலி கொள்ளும் என்று மக்களில் பலர் நம்பி வந்த நிலையில், முழு உடல் தகுதி பெற்ற இளைஞர், அதிலும் உலக அளவில் ஆணழகன் பட்டம் பெற்றவர் தற்போது கொரோனாவுக்கு பலியாகி உள்ள சம்பவம் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்துவதாக உள்ளது.
- பிரியா வேலு