வயிற்றுப் பசியைப் போக்குவதற்கன்றி, வேறெந்த பலனையும் எதிர்பாராமல் நடுசாமக் கொள்ளையையே தொழிலாய்க் கொண்ட கொம்பூதி ஊரின் மக்கள் தான் முக்கிய கதை மாந்தர்கள். விலையுயர்ந்த நகைகளைக் கொள்ளையடித்தாலும், அவற்றை அப்படியே பச்சைமுத்து போன்ற பேராசைக்காரனிடம் கொடுத்துவிட்டு, பதிலுக்கு தானியங்களை மட்டும் பெற்றுக்கொண்டு பிழைத்துவரும் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் அப்பாவிகள். கொம்பூதியை அடுத்து பரம்பச்சேரி, அதனை அடுத்து பெருநாழி. இந்த மூன்று ஊர்களைச் சுற்றியே பின்னப்பட்டது இந்த 447 பக்கக்கதை.
பரம்பச்சேரி மக்களுக்கு பெருநாழியில் தான் குடிதண்ணீர் கிடைக்கும். கிணற்றுத் தண்ணீரை பெருநாழி மக்கள் இறைத்து ஊற்றி பரம்பச்சேரியின் குடம் நிறைந்தால்தான் உண்டு; அந்த ஒரு குடம் தண்ணீருக்காக பெருநாழிப் பெண்களிடம் பரம்பச்சேரிப் பெண்கள் பிச்சையெடுக்காத குறையாகக் கெஞ்ச வேண்டும். ஏனென்றால், பரம்பச்சேரி மக்கள் அவர்களாகவே தண்ணீர் இரைத்தால் அது “தீட்டு”. பெருநாழியின் வயல்களில் உழைப்பது என்னவோ பரம்பச்சேரி மக்கள்தான். அவர்கள் உழைப்பின் விளைச்சலை உண்டு உயிர் பிழைத்தாலும், “கிணற்றில் அவர்கள் தண்ணீர் எடுத்தால் தீட்டு” எனும் அளவில்தான் பெருநாழிக்கும் பரம்பச்சேரிக்குமான உறவு.
இந்நிலையில் பசியால் அழும் பச்சிளங்குழந்தைக்குக் கூட தண்ணீர் இல்லாமல்போக, வேறு வழியின்றி பெருநாழி கிணற்றில் நீர் இறைக்கிறாள் பெரும்பச்சேரி பெண் ஒருத்தி. அதைக்கண்டு ஆவேசம் கொண்ட பெருநாழியின் பெண் ஒருத்தி ஊரைக் கூட்டி வம்பு வளர்க்க, தண்ணீர் இறைத்தவளின் கணவன் கட்டெறும்புகள் மொய்க்கும் அளவிற்கு உடல் முழுவதும் சக்கரைப்பாகு ஊற்றப்பட்டு, மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருக்கிறான். அவனைக் காப்பாற்ற வருகிறார் கொம்பூதியின் வேயன்னா. பெருநாழியிடமிருந்தும் இரண்டு நாட்களாக மொய்த்துக்கொண்டிருந்த கட்டெரும்புகளிடத்திருந்தும் அவனைக் காப்பாற்றிய பின்னர், வேயன்னா பெருநாழிக்கு கட்டளையிடுகிறார்.
“உங்க ஊர் பெரிய மனுஷங்க எல்லோருக்கும் சொல்லு.. நாளையிலே இருந்து, பெரும்பச்சேரி சனமெல்லாம் இந்த ஊரு எஸ்டேட் கிணத்துல, ‘தன் வாளி’ போட்டுத் தான் தண்ணி இறைப்பாங்க. தடுக்கிறவனைக் கிணத்துக்கு வரச் சொல்லு…”
பொழுது விடியுமுன்பே பெரும்பச்சேரி சனம் கிளம்பிவிட்டது. ஆண், பெண் அத்தனை பேர் தலையிலேயும் கையிலேயும் பானை, குடங்கள். வீட்டுக்கொரு பனை ஓலைப்பட்டை.
வேயன்னா, வில்லாயுதத்தோடு கொம்பூதி இளவட்டங்களும் ஆயுதங்களோடு, விடியுமுன்பே பெரும்பச்சேரி வந்து விட்டனர்.
சாபம் விலகிய சந்தோசத்தில் பெரும்பச்சேரி சனம் குதியாட்டம் போட்டுக் கிளம்பியது. சின்னஞ் சிறுசுகளும் கையில் அகப்பட்ட மண் சட்டிகளோடு கூட்டத்துக்குள் கலந்தார்கள். காலமெல்லாம் குடி தண்ணிக்குப்பட்ட கருமாயம் தீரப் போகிற துள்ளுமானம், ஒவ்வொரு முகத்திலும் பளிச்சிட்டது.
பொழுது இன்னும் விடியலே.
பெருநாழி உழவு கட்டிகளை மிதித்து நொறுக்கி கொண்டு உள்ளே போகும் வேயன்னாவைப் பின்தொடர்ந்து தாகப்பட்ட சனம் நடந்தது.
கொம்பூதி இளவட்டங்களும் பெரும்பச்சேரி இளவட்டங்களும் கலந்து நடந்தார்கள்.
இன்றைக்கு நடுக்காட்டுச் சந்தை கூடுகிற கிழமை. பொருத்தமான நாளாகத் தான் வாய்த்திருக்கிறது.
கண்மாய்க்கரை ஏறியதும் பொழுதும், பளபளவென விடிந்திருக்க, எஸ்டேட் கிணத்தடியிலே உள்ளூர் ஆள் ஒருத்தரையும் காணோம்.
கிணத்தருகே வந்து நின்ற வேயன்னா, சனங்களைப் பார்த்து கையசைத்தார். அத்தனை பனை ஓலைப் பட்டைகளும் சரசரவெனக் கிணற்றுக்குள் இறங்கின.
நாலு பக்கச் சுற்றுச்சுவர் நெடுக நின்ற அத்தனை ஆணும் பெண்ணும் முதற் முதலாக எஸ்டேட் கிணற்றுத் தண்ணீரைக் குனிந்து பார்த்தார்கள். தண்ணீர் நிறைய ‘மலம்’ மிதந்தது.
அதன்பின் பெருநாழியின் சந்தையும் வீதிகளும் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிறையாக்கப்படுகின்றன. பரம்பச்சேரியும் கொம்பூதியும் இணைந்திருப்பதும், அவர்களை எதிர்த்திருப்பதும் பொறுக்காத பெருநாழிக்கு போலீஸ் கச்சேரி (போலீஸ் ஸ்டேஷன்) வந்தது பேருதவியாய்த் தெரிகிறது.
பிரிட்டிஷ் இன்ஸ்பெக்டருக்கும், வடஇந்திய இன்ஸ்பெக்டருக்கும் கட்டுப்படாத கொம்பூதி மக்கள் அவர்களுக்குப்பின் வந்த இன்ஸ்பெக்டரின் (அவர்கள் குலத்திலுதித்த சேதுவின்) சொல்லிற்கு கட்டுப்படுகிறார்கள், களவைக் கைவிட்டு சேதுவிற்கு கொடுத்த வாக்கிற்கு கட்டுப்பட்டு பசியால் இடர்பட்டாலும் களவிற்கு செல்லாமல் இருப்பவர்களுக்கு; அந்நாள்வரை கொம்பூதி கொடுத்த களவுப்பொருட்களால் பெருமளவில் பொருள் சேர்த்து செல்வந்தனான பச்சைமுத்துவால் மறைமுகமாக பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன. கொம்பூதி வேயன்னாவின் மகனான சேதுவின் துப்பாக்கியினாலேயே வேயன்னா இறந்துவிழ, வேயன்னாவையே நம்பியிருந்த கொம்பூதி சனம் திக்கற்று நிற்க, உண்மை தெரிந்ததும் சேது அழுவதுடன் கதை முடிகிறது.
இதற்கிடையே கள்ளர்களின் குலத்தில் தோன்றிய சேது போலீஸ் ஆன கதை; ஆற்றங்கரையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேயன்னாவையும் அவர்களது வம்சத்தினரையும் அழைத்துவந்து கொம்பூதியில் குடியமர்த்தய வையத்துரை, வையத்துரையின் தாயார் காளத்தியின் கதை, வைரங்களைத் தேடி அலையும் நாகமுனி, அந்த வைரங்களை அடைவதற்காகவே நரபலி கொடுப்பதற்காக வளர்த்தெடுக்கப்படும் வஜ்ராயினி, அவளை வளர்த்தெடுக்கும் ஹசார் தினார், ஏமாற்றி தங்களை சிறைப்பிடித்த போலீஸ் அதிகாரிகளையும் தீக்கிரையாக்கிய கொம்பூதி மக்களின் எழுச்சி என 447 பக்கங்களும் அத்தனை சுவாரசியம்.
நூல்: குற்றப் பரம்பரை
ஆசிரியர்: வேல ராமமூர்த்தி
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்: 447
விலை: ரூ. 450
- நிவேதிதா ஆண்டனிராஜ்