மகாபாரதத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரத்தின் பெயர் கர்ணன். கர்ணனின் பெயர் ஒரு காரணப் பெயர் ஆகும். பிறக்கும் போதே காதில் குண்டலங்கள், மார்பில் கவசம் ஆகியவற்ரோடு பிறந்த குழந்தை என்று மகாபரதத்தில் கர்ணன் வர்ணிக்கப்படுகின்றான். அவனது காதில் இருந்த குண்டலங்களே அவனது பெயருக்குக் காரணமாக அமைந்தன. வட மொழியில் ‘கர்ண’ என்றால் காது. எனவே கர்ணத்தில் அணிகலனோடு பிறந்தவன் கர்ணன் ஆனான்.
கர்ண – என்ற சொல் தமிழிலும் புழங்கிவருகிறது. மிக மோசமான செய்தியை ’கர்ண கொடூரம்’ என்று சொல்கிறோம். காதில் கேட்கவே முடியாத அளவுக்கு மோசமானது என்பதே இதன் பின்னுள்ள பொருள்.
ஒரு செய்தியை வாழ்மொழியாக மட்டுமே கேள்விப்படும்போது அதைக் ‘கர்ண பரம்பரைச் செய்தி’ என்கிறோம். செவிவழிச் செய்தி என்பது இதற்கு நிகரான வேறு தொடர்.
அதேசமயம் வடமொழியில் கரண – என்று இருந்த சொல்லும் தமிழில் கர்ண என்று புழங்கியது உண்டு. கரண என்ற சொல்லுக்கு உதவியாளன் அல்லது நண்பன் என்று பொருள். அதனால் கிராம அலுவலர்களை ‘கிராம கர்ணன்’ என்று அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. பின்னர் கிராம கணக்கர்கள் ‘கர்ணம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு கர்ணனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவை உச்சரிப்புப் போலிகள்.
இரா.மன்னர் மன்னன்