அரசியல் விளையாட்டுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் இழப்பு – என்று நடிகர் கமல்ஹாசன் பிரசாரத்தில் குறிப்பிட்டது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.
நடைபெற உள்ள பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலின் போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனக்கு அசையா சொத்துகள் ரூ.131 கோடியே 84 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலும், அசையும் சொத்துகள் ரூ.45 கோடியே 9 லட்சத்து 1,476 மதிப்பிலும் உள்ளன எனவும், தனது மொத்த சொத்துகள் ரூ.176 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 476 மதிப்புள்ளவை என்றும் 50 கோடிக்கு கடன்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதனால் ‘தமிழகத்தின் பணக்கார வேட்பாளர்களில் ஒருவர்’ என்று வேட்பு மனுத் தாக்கலின் போது அவர் குறிப்பிடப்பட்டார்.
அந்நிலையில் இன்று தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய கமல்ஹாசன் ’அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் இழப்பு’ என்று பேசியதால் சமூக வலைத்தளங்களில் உள்ளவர்கள் இரண்டு வருமானக் கணக்குகளையும் வைத்து சொந்தமாகக் கணக்குப் போடத் தொடங்கி உள்ளனர்.
தற்போது 66 வயதாகும் நடிகர் கமல் 5 வயதில் இருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனது 60 வருட கலையுலக வாழ்க்கையில் அவர் சம்பாதித்த சொத்தின் மதிப்பு கடன்கள் போக 126 கோடி ரூபாயாக உள்ள நிலையில் அவருக்கு எப்படி 300 கோடி ரூபாய் நட்டம் வந்தது? – என்று சிலரும்,
தேர்தல் அறிவிப்பு தொடங்கும்வரை இந்தியன் 2, விக்ரம், பிக்பாஸ் சீசன் 4 என சொந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கமலுக்கு எப்படி இவ்வளவு இழப்பு வந்தது? – என்று சிலரும்,
முன்பு விஸ்வரூபம் படம் பிரச்னையான போது தனது மொத்த சொத்தும் அந்தத் திரைப்படத்தில் முதலீடு செய்யப்பட்டதைப் போலவும் தன்னிடம் வேறு பணமே இல்லை என்பது போலவும் கூறிய கமல்ஹாசன், இப்போது தன்னை பணம் அச்சடிக்கும் எந்திரம் போல வெளியே காட்டிக் கொள்கிறாரா? – என்று சிலரும் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
– நமது நிருபர்