திரையுலகில் இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறைகளிலும் ஒரே நேரத்தில் அசத்தி வரும் ஜி. வி. பிரகாஷ்குமாருக்கு 34வது பிறந்தநாள் இன்று.
வெயில் படத்தின் மூலமாக முறைப்படி இசையமைப்பாளராக அறிமுகமானாலும் 6 வயதிலேயே அவருக்கான சினிமா பயணம் தொடங்கியது என்றே சொல்லலாம்.
ஆம்..ஜென்டில்மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே” பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடும்போது அவருக்கு 6 வயது தான்.
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் சகோதரி மகன் என்பதால் இளம் வயதிலிருந்தே ஜி.வி.க்கு. இசையின் மீது ஒரு காதல் இருந்துள்ளது.
அதன் வெளிப்பாடே குறுகிய காலத்தில் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, அசுரன், சுரரைப் போற்று, தெறி, மதராசப்பட்டினம் ஆகிய படங்களில் பின்னணி இசையில் தான் ஒரு ஜீனியஸ் தான் என நிரூபித்து இருப்பார்.
இசையை தவிர்த்து நடிப்பிலும் களமிறங்கிய ஜி.வி.க்கு அது ஓரளவு கை கொடுத்தாலும் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அவர் இசையமைப்பாளராகவே தொடர வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
தொடர்ந்து இசை, நடிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் ஜி.வி.க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்…!
- மூவேந்தன்