மதுரையில் தனியார் பள்ளிக்கு இணையாக வசதிகளோடு அரசு பள்ளி செயல்பட்டு வருவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உசிலம்பட்டி அருகே முண்டுவேலம்பட்டியில் உள்ள கள்ளர் தொடக்கப்பள்ளி 1938 ஆம் ஆண்டு கள்ளர் சீரமைப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.
தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்தப் பள்ளி மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் ஆதிக்கத்தால் மாணவ – மாணவியரின் வருகை குறைந்தது மட்டுமல்லாமல் பள்ளியின் கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்து காணப்பட்டது.
இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு இந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வந்த முருகேஸ்வரி பள்ளியின் தரம், மாணவர்களின் கல்வியை மேம்படுத்த முடிவு செய்து, மாதந்தோறும் பெற்றோர் – ஆசிரியர் சங்க கூட்டங்களை நடத்தியுள்ளார்.
அதில் முதலில் பள்ளியின் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த முடிவு செய்து தனது சொந்தப் பணம் ரூ. 2 லட்சத்தை கொண்டு பணிகளைத் தொடங்கியுள்ளார்.
இதையறிந்த முன்னாள் மாணவர்களும், கிராம மக்களும் ரூ.3 லட்சம் திரட்டிக் கொடுக்க தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தின் ரூ.10 லட்சமும் முண்டுவேலம்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளிக்கு கிடைக்க பெற்றது.
அதனைக் கொண்டு தரமான கட்டடம், சிறந்த இருக்கைகள், ஸ்மார்ட் வகுப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளிர்சாதன வசதி கொண்ட இரு வகுப்பறைகள் என இப்பள்ளி ஜொலிக்கிறது.
மேலும் மாணவர் சேர்க்கையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.