கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், வரும் செப்1ஆம் தேதி முதல் திறப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக முன் தயாரிப்புகள், வழிகாட்டு நடைமுறைகள், தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் என அரசுத் தரப்பில் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதே சமயம், பெற்றோர்கள் தரப்பிலும் குழந்தைகள் நலன் குறித்த கவலை அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இதன் விளைவாக பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்ற கோரிக்கையும் பரவி வருகிறது.
இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரும், எழுத்தாளருமான இரா.எட்வின் அவர்களிடம் பேசினோம்.
அவர் தெரிவித்ததாவது, “ஆசிரியர்களுக்கு இரண்டு டோஸ் கட்டாயம். 6 அடி இடைவெளி அனைவருக்கும் கட்டாயம் என கண்டிப்பான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை எதுவும் தொற்றுப் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் புதிய திட்டங்கள் அல்ல. இன்னும் ஒரு படி மேலே சொன்னால், ஏற்கனவே பல்வேறு இடங்களில் அமலில் இருந்து தோற்றுப்போன நடைமுறைகள் தான்.
மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது
பள்ளிகளைத் திறந்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், பள்ளிக்குள் வந்த மாணவர்களை விளையாடாதே, உன் நண்பனை நீ தொடாதே, அவனோடு அமர்ந்து உண்ணாதே என்றெல்லாம் சொல்ல முடியுமா?
ஆசிரியர்களுக்கு 2 டோஸ் கட்டாயம் என்றபிறகும் கூட, பயோமெட்ரிக் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. என்றால், 2 டோஸ் தடுப்பூசிகளுக்குப் பிறகும் கூட தொற்றுக்கான அபாயம் இருக்கிறது என்று அரசுக்கு தெரிந்திருக்கிறதுதானே? இப்படி இருக்கையில், குழந்தைகள் இன்னும் தடுப்பு மருந்து கொடுக்கப்படாத நிலையில், குழுமி விளையாட அனுமதிப்பது அச்சத்தை அதிகரிக்கிறது.
கல்வித்தரத்தைக் காட்டிலும் குழந்தைகளின் உயிர் முக்கியமானது. நமக்கே இப்படித் தோன்றும்போது இதை அரசு நிச்சயம் யோசித்திருக்கும். இன்னும் கூடுதலாக அல்லது வலுவான நம்பிக்கையூட்டும் விதமான வழிமுறைகளை வகுத்தபிறகு பள்ளிகளைத் திறந்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.
அதே சமயம், குழந்தைகளுக்கு ஏற்படும் கல்விக் குறைபாட்டையும், பள்ளிச் சூழல் இல்லாததால் ஏற்படும் இழப்புகளையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதற்காக குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டுமா என்றால், இந்தச் சூழலில் வேண்டாம் என்பதே பதில்.
எனில் என்ன செய்வது?
பள்ளிக்கூடத்தை எப்போது திறப்பது, எப்படித் திறப்பது? பிள்ளைகளை எப்படிப் பாதுகாப்பது என்ற நோக்கில் நடத்தப்படும் ஆலோசனைகளுக்குப் பதிலாக, பிள்ளைகளை நோக்கி கல்விக்கூடங்களைக் கொண்டு செல்வது எப்படி என்ற நோக்கில் சிந்திக்க வேண்டும். Instead school should go to children என்ற நெடுநாள் கனவை நனவாக்குவதற்கான சாத்தியங்களை, பெற்றோர்கள் ஆசிரியர்கள் மட்டுமன்றி மாணவர்களுடன் கலந்தாலோசித்து அரசு முடிவெடுக்க வேண்டும்.
None is safe when one is affected என்பதுதான் கொரோனா சமயத்தில் வகுக்கப்படும் கொள்கைகளின்போது, அரசு உள்ளிட்ட அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய பரந்துபட்ட புரிதல்.
கடைசி கொரோனா நோயாளி இருக்கும்வரை, யாரும் இங்கு பாதுகாப்பாய் இல்லை என்பதை உணர வேண்டிய உண்மை. இதில் இதில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அங்கன்வாடிகளும் விதிவிலக்கல்ல.
2 comments
[…] […]
[…] […]